

ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா கொடைக்கானலில் உள்ள சொத்தை முறைகேடு செய்து வாங்கியதாக விவசாயி ஒருவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
பெரியகுளம் அருகே வடுகபட்டி ஜெயந்தி நகரைச் சேர்ந்தவர் முனி யாண்டி(59). விவசாயியான இவர் தேனி மாவட்டக் காவல் கண்காணிப் பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அதில் தெரிவித்தி ருப்பதாவது: என் மனைவிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் 83 சென்ட் நிலம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் உள்ளது. இதை 2010-ம் ஆண்டு விற்க முயன்றோம்.
அப்போது ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பியான ஓ.ராஜா இதை வாங்கிக் கொள்வதாக தொடர்பு கொண்டார். நேரடியாக சொத்து வாங்கினால் தனக்குப் பிரச்சினை ஏற்படும் என்று கூறி பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் பெயரில் பவர் பத்திரம் எழுதிக் கேட்டனர்.
ரூ.40 லட்சம் விலை பேசி கிருஷ்ணன் பெயருக்கு பவர் பத்திரம் எழுதிக் கொடுத்தோம். 3 மாதத்தில் பணம் தருவதாகக் கூறியவர் குறித்த தேதியில் தரவில்லை. எனவே முதல்வர் தனிப் பிரிவில் புகார் கொடுத்தோம். நடவடிக்கை இல்லை. ஓ.ராஜாவிடம் தொடர்ந்து பணம் கேட்டபோது பணம் தர முடியாது. அரசியலில் நான் செல்வாக்கானவன், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். பின்பு தென்கரையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பெயரில் ஆவணங்களை மாற்றினர்.
தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும். 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி இருந்ததால் உயிருக்குப் பயந்து அமைதி யாக இருந்தோம். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து சொத்தை மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.