

அட்சய திரிதியை நாளான நேற்று நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளதாக நகைக் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி, பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘அட்சய திரிதியை நாளில் பொதுமக்கள் நகை மற்றும் பொருட்களை வாங்க விரும்பு வார்கள். நேற்று காலையில் மக்கள் கூட்டம் சற்று குறைவாக இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு மக்கள் அதிகமாக வரத் தொடங்கினர். வழக்கமான நாட்களை காட்டிலும் கூடுதலாக 4 மணி நேரம் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. ஒரு சில இடங்களில் கடந்த ஆண்டு போலவே நகைகள் விற்பனை ஆகியுள்ளன. ஆனால், பெரும்பாலான நகைக் கடைகளில் கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் விற்பனை குறைந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிதான் வாடிக்கையாளர்களின் வருகை குறைந்ததற்கு முக்கியக் காரண மாக இருக்கிறது. தங்கம் விலை உயர்வும் மற்றொரு காரணமாகும்’’ என்றனர்.
2,000 கிலோ விற்பனை
மதுரை தங்கமயில் நகைக் கடையின் இணை நிர்வாக இயக்குநர் பி.ஏ.ரமேஷ் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘சென்னை போன்ற இடங்களில் நகை விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. ஆனால், மதுரை, திருச்சி, கோவை போன்ற நகரங் களில் வாடிக்கையாளர்களின் வருகை அதிக மாக இருந்தது. தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியால் ஒரே நபர் அதிக அளவில் தங்கம் வாங்குவது குறைந்து இருந்தது. ஒரே நாளில் (நேற்று) தமிழகம் முழுவதும் 1,500 முதல் 2,000 கிலோ வரை தங்கம் விற்பனை ஆகியுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு இது 2,100 கிலோவுக்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.