முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தில் முதல் முறை: கோவையில் இரு கை, கால்களை இழந்தவருக்கு செயற்கை உறுப்புகள் பொருத்தம்

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து நன்றி தெரிவித்த சுபாஷ். உடன், கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா, மருத்துவமனையின் முடநீக்கியல், விபத்து சிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் செ.வெற்றிவேல்செழியன் உள்ளிட்டோர்.
கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை சந்தித்து நன்றி தெரிவித்த சுபாஷ். உடன், கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா, மருத்துவமனையின் முடநீக்கியல், விபத்து சிகிச்சை பிரிவு இயக்குநர் டாக்டர் செ.வெற்றிவேல்செழியன் உள்ளிட்டோர்.
Updated on
1 min read

கோவை: விபத்தில் இரு கை, கால்களை இழந்த இளைஞருக்கு தமிழகத்தில் முதல் முறையாக முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கோவை அரசு மருத்துவமனையில் எடை குறைந்த உறுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

கோவை அன்னூரை அடுத்த குமரன் குன்று, வேப்பம்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் (22). இவர், கடந்த பிப்ரவரி 5-ம் தேதி ஏற்பட்ட மின் விபத்தில் சிக்கி முழங்காலுக்கு கீழ், முழங்கைக்கு கீழ் பகுதிகளை இழந்தார்.

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையின் முடநீக்கியல், விபத்து சிகிச்சை பிரிவு இயக்குனர் செ.வெற்றிவேல் செழியன் தலைமையில், செயற்கை அங்க வடிவமைப்பாளர்கள் பாலச்சந்தர், ஆனந்த்பாபு, கோகுல்ராஜ், ஜெகன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

பின்னர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சுபாஷூக்கு எடை குறைந்த இரு செயற்கை கைகள், கால்கள் இலவசமாக பொருத்தப்பட்டன.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை இன்று (ஜூலை 21) நேரில் சந்தித்த சுபாஷ், தனக்கு பொருத்தப்பட்ட செயற்கை கால்களை காண்பித்தும், செயற்கை கைகளால் கைகுழுக்கியும் நன்றி தெரிவித்தார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்குழுவுக்கு ஆட்சியர் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இதுதொடர்பாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா கூறும்போது, "சுபாஷுக்கு தேவையான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, உளவியல் ஆலோசனை ஆகியவை முடநீக்கியல் மருத்துவ நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள்களால் வழங்கப்பட்டன. இரண்டு கைகள், கால்களை இழந்த ஒருவருக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயற்கை உறுப்புகள் வழங்கப்பட்டது தமிழகத்தில் இதுவே முதன் முறையாகும்.

இந்த செயற்கை அங்கங்களை தனியாரிடம் தருவிப்பதற்கு குறைந்தபட்சம் ரூ.2.50 லட்சம் வரை செலவாகும். காப்பீட்டு திட்டத்தின்கீழ் அவை இலவசமாக அளிக்கப்பட்டுள்ளன. இதனால் சுபாஷ் தானாகவே தன் வேலைகளை செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளார்”என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in