Published : 21 Jul 2022 07:25 PM
Last Updated : 21 Jul 2022 07:25 PM
சென்னை: கடன் பிரச்சினையில் மாமியாரை அரிவாள் மனையால் வெட்டிய மருமகனுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை, மாமியார் மன்னித்துவிட்டார் என்ற காரணத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.
சேலம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணி. இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 2017 டிசம்பர் மாதம் 28-ம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார்.
இதையடுத்து, மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சேலம் மகளிர் நீதிமன்றம் சுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து கடந்த மே 25-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்பிரமணி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணி சார்பில் வழக்கறிஞர் பாயிண்ட் பாலாஜி ஆஜராகி, "மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானமாகியுள்ளனர். எனவே, மனுதாரரை விடுதலை செய்ய வேண்டும். மாமியாரும், மனுதாரரின் மனைவியும் குழந்தைகளும் வந்துள்ளனர்" என்றார்.
அப்போது, நீதிமன்றத்தில் மனுதாரரின் மாமியார், மனைவி மற்றும் 3 குழந்தைகள் ஆஜராகினர். தனது மகள் மருமகனுடன் வாழ வேண்டும். குழந்தைகளை வளர்க்க வேண்டும். எங்களுக்குள் சமாதானமாகிவிட்டது. மருமகனை மன்னித்து விட்டேன். அவரை விடுதலை செய்யுங்கள் என்று மாமியார் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில் , "கணவருக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பதில் உயர் நீதிமன்றம் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று ஜோஷி என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட பிறகும் உயர் நீதிமன்றம் குடும்ப பிரச்சினையில் அதிகாரத்தை பயன்படுத்தலாம். இந்த வழக்கில் கொலை முயற்சி மற்றும் கொடுங்காயம் விளைவித்தல் பிரிவில் மனுதாரருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் குற்றம் நடந்துள்ளது. கணவருக்கும் மனைவிக்கும் இடையே இருந்த பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, உயர் நீதிமன்றத்திற்கு தரப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி மனுதாரரை இந்த நீதிமன்றம் விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT