‘நிதிக் காரணத்தால் காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டம் நிறுத்தமா?’ - உயர் நீதிமன்றம் காட்டம்

‘நிதிக் காரணத்தால் காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டம் நிறுத்தமா?’ - உயர் நீதிமன்றம் காட்டம்
Updated on
1 min read

மதுரை: நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி காவல் துறையினர் மன அழுத்தம் போக்கும் திட்டத்தை நிறுத்தியதை ஏற்க முடியாது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கரோனா 2-ம் அலையின் போது தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை முதலில் சாத்தான்குளம் போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக விசாரித்து, விசாரணையை சிபிஐக்கு மாற்றியது. சிபிஐ போலீஸார் விசாரித்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஹென்றி டிபேன், ''ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இத்திட்டம் நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது'' என்றார்.

தொடர்ந்து நீதிபதிகள், ''காவல் துறையினர் ஏற்கெனவே அதிக அழுத்தத்தில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் மனஅழுத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் காவல்துறையினரின் மன அழுத்தத்தைப் போக்கும் திட்டத்தை செயல்படுத்த ரூ.10 கோடி நிதி இல்லை என அரசு கூறுவதை ஏற்க முடியாது'' என்றனர். அதற்கு அரசு வழக்கறிஞர், ''இது தொடர்பாக அரசிடம் உரிய விளக்கம் பெற்ற நீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும்'' என்றார்.

பின்னர் நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் முறையாக நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்காமல் விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, அந்த விசாரணையில் தலையிட விரும்பவில்லை என்று கூறி விசாரணையை ஆக.4-க்கு ஒத்திவைத்தார்.

''சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக விசாரிக்க சென்ற நீதித் துறை நடுவரை அவதூறாக பேசியதாக 3 காவலர்கள் மீது பதிவு செய்யப்பட்ட நீதிமன்ற அவதிப்பு வழக்கும் ஆக. 4-ல் விசாரணைக்கு எடுக்கப்படும்'' என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in