சோனியாவை விசாரிக்க எதிர்ப்பு: புதுச்சேரியில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது
புதுச்சேரி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத் துறையைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் கட்சியினர் இந்திரா காந்தி சதுக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதியடைந்த சூழலில், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியை அமலாக்கத் துறை 5 நாட்கள் அழைத்து விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் அமலாக்கத்துறை இன்று விசாரணைக்கு அழைத்துள்ளது. இதனைக் கண்டித்து புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி சதுக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தார். இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத், முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், முன்னாள் எம்எல்ஏக்கள் அனந்தராமன், நீல.கங்காதரன் என ஏராளமானோர் கலந்துகொண்டு சோனியா காந்தி மீது பொய் வழக்கு கூடாதே என்றும், மத்திய அரசு மற்றும் அமலாக்கத் துறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
மறியல் நடந்த இடம் நகரின் முக்கியப்பகுதியாகவும், முக்கிய சாலைகள் இணையும் இந்திரா காந்தி சதுக்கம் இருந்ததால் விழுப்புரம்- திண்டிவனம் மற்றும் சென்னை, கடலூர் என அனைத்து சாலைகளிலும் நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வாகனங்கள் தேங்கின. இந்த சாலை மறியல் போராட்டத்தால் இந்திரா காந்தி சதுக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உட்பட்ட அனைவரையும் போலீஸார் கைது செய்து கரிகுடோனில் அடைத்தனர்.
போலீஸார் கைது செய்தோரை அழைத்துச் செல்ல இருவாகனங்களை மட்டுமே எடுத்து வந்திருந்தனர். இதனால் போராட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கைதானார்கள். ஏராளமானோர் கைதாகாமல் அங்கிருந்து கலைந்தனர்.
காவல்துறையினர் தரப்பில் கேட்டதற்கு, "போராட்டத்தில் 270 பேர் வரை பங்கேற்றனர். 100 பேர் கைதானார்கள். அவர்கள் அனைவர் மீதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மறியல் உள்ளிட்டவற்றுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மாலையில் விடுவிக்கப்படுவார்கள்" என்று தெரிவித்தனர்.
