நாராயணசாமி புதுச்சேரி முன்னாள் முதல்வர் | கோப்புப் படம்
நாராயணசாமி புதுச்சேரி முன்னாள் முதல்வர் | கோப்புப் படம்

விலைவாசி பிரச்சினையை கவனிக்காமல் அரசியல் பழிவாங்குவதில் மோடி அரசு தீவிரம்: நாராயணசாமி

Published on

புதுச்சேரி: “விலைவாசி உயர்வைப் பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை மத்திய அரசு செய்கிறது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்த அமலாக்கத் துறையை கண்டித்து புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை காவல் துறையினர் கரிக்குடோனில் அடைத்தனர்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியது: "எதிர்க்கட்சி தலைவர்களை அமலாக்கத் துறை அழைத்து அவர்களுக்கான செல்வாக்கையும், மரியாதையையும் குறைக்க வேண்டும், அந்தக் கட்சியின் பலத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு செயல்படுகிறது. அமலாக்கத் துறையை பயன்படுத்தி அரசியல் கட்சி தலைவர்களுக்கு இழுக்கை விளைவிக்கிறது.

ஆவணங்கள் அனைத்தும் தரப்பட்டாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மோடி அரசு, சோனியா காந்தியையே விசாரணைக்கு அழைத்துள்ளோம் என்ற ஒரு பாவனை கட்டுவதற்காக இதனை செய்கிறார்கள்.

இந்த வழக்கின் முடிவில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்று நிரூபிக்கப்படும். மோடியின் முகத்திரை கிழிக்கப்படும். அராஜகத்தை கடைபிடித்து, பண பலம், அதிகார பலத்தை வைத்து மாநில அரசுகளை கவிழ்க்கும் வேலையை மோடி அரசு செய்கிறது.

பிரதமர் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளது. அரிசி, பருப்பு, கோதுமை சமையல் எண்ணெய், சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை விலைவாசி உயர்ந்துவிட்டது. 25 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளது. இதை பற்றி கவலைப்படாமல் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை மத்திய அரசு செய்கிறது.

இதனால், நாடாளுமன்றம் தொடர்ந்து 3 நாட்கள் முடக்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி, மைதா, பால், தயிர் என மக்கள் தினமும் பயன்படுத்துகின்ற அத்தியாவசிய பொருட்களும் ஜிஎஸ்டி வரி போட்டு மக்களின் அடிவயிற்று அடிக்கும் மோடி அரசு தூக்கி எறியப்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை" என்று நாராயணசாமி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in