Published : 13 May 2016 06:03 PM
Last Updated : 13 May 2016 06:03 PM

படிப்படியாக மதுவிலக்கு என்பது ஏமாற்று வேலை: கெங்கவல்லி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி காட்டம்

வேட்பாளருக்கு சில கேள்விகள்

ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். படிப்படியாக மதுவிலக்கு என்பதெல்லாம் ஏமாற்று வேலை. மக்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை என்று திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்ஷினி கூறியுள்ளார்.

சேலம் மாநகரத்தின் முதல் பெண் மேயராக இருந்த ரேகா பிரியதர்ஷினி, தற்போது கெங்கவல்லி தனித் தொகுதியின் திமுக வேட்பாளராக களமிறங்குகிறார்.

அவர் தி இந்து தமிழ் இணையதளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி.

பிரச்சாரம் எந்த அளவில் உள்ளது?

மிகவும் சிறப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். முதியோர் உதவித் தொகையை நிறுத்தியது, பெரியவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு சேகரிக்க செல்லும் போதெல்லாம் ஆண்களும் பெண்களும் எங்களுடன் இணைந்து ஓட்டு கேட்க வருகிறார்கள். இதனால் ஊரே காலியாகக் கிடந்த சம்பவங்களும் உண்டு.

வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

இந்த முறை, வழக்கத்தை விட மக்கள் அதிக எழுச்சியுடன் இருக்கிறார்கள். மக்களில் பெரும்பாலானோர் ஏரி வேலை செய்பவர்கள் என்பதால், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. ஏற்கெனவே மேயராக இருந்ததால் என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அப்போது பாதாள சாக்கடைத் திட்டம், திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் உள்ளிட்டவைகளை நிறைவேற்றி இருக்கிறேன். இதனால் துறை சார்ந்த அறிவும், அனுபவ அறிவும் இருக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

தொகுதி மக்களின் தேவை என்னவாக உள்ளது?

எங்கள் தொகுதி, முழுக்க முழுக்க விவசாயம் சார்ந்த தொகுதி. எண்பது சதவீதம் பேர் விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில்தான் இருக்கிறார்கள். நீரைத் தேக்கி வைக்க ஓர் அணை வேண்டும் என்பது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சேரடி- பொன்னாளியம்மன் அணை கட்டப்பட்டால் கெங்கவல்லி மற்றும் தலைவாசல் மக்கள் பயன்பெறுவார்கள்.

அடுத்ததாக பால் பண்ணை தேவைப்படுகிறது. பால் உற்பத்தியாளர்கள் அதிகம் வசித்தாலும், பால் முதலிய பொருட்களை சந்தைப்படுத்த இங்கு எந்த வசதியும் இல்லை. அதனால் பால் பண்ணை முக்கியத் தேவையாக உள்ளது. இங்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிகம் உள்ளனர். முந்தைய காலங்களில் ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கிறது. அதனால் திமுக ஆட்சிக்கு வந்ததும், ஜல்லிக்கட்டு நடத்தத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று உறுதியளித்திருக்கிறோம்.

அதிமுகவின் மதுவிலக்கு பற்றிய அறிவிப்பு குறித்து?

படிப்படியாக மதுவிலக்கு என்பதெல்லாம் ஏமாற்று வேலை. மக்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x