

மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் தொகுதியின் கீழ் வரும் குருவித்துறை கிராம தலித் சமுதாயத்தினர், வாக்குச்சாவடி உயர்சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் இருப்பதால் வாக்களிக்க மாட்டோம் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
வாக்காளர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குருவித்துறை கிராமத்தில் அடிக்கடி சாதி மோதல்கள் ஏற்படுவது வழக்கம்.
இதே கிராமத்தில் சில மாதங்களுக்கு முன்பாக தலித் சமுதாயத்தினரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதாவது ஜல்லிக் கட்டு தடை செய்யப்பட்டுள்ள ஆத்திரத்தில் தலித்துகள் பொங்கல் கொண்டாடக் கூடாது என்று உயர் சாதி இந்துக்கள் அவர்களை தொந்தரவு செய்துள்ளனர். இதனையடுத்து எழுந்த பிரச்சினையில் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதல் தொடர்பாக மதுரை ஊரக காவல்துறையினர் 28 பேரை கைது செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் 65 உயர் சாதி இந்துக்கள் மீது பல்வேறு பிரிவுகளில் 6 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
பொங்கல் நாளன்று தலித் பகுதியில் சென்று ரகளை செய்ததாக 3 பேரை தலித்துகள் பிடித்து வைத்தனர் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட, உயர் சாதி இந்து வகுப்பைச் சேர்ந்த சிலர் உடனடியாக ஆயுதங்களுடம் தலித் பிரிவினர் பகுதிக்குச் சென்று தாக்குதல் நடத்தினர். இதில் பெண் உட்பட 16 தலித்துகள் காயமடைந்தனர்.
இதனையடுத்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தலைவர் எஸ்.கே.பொன்னுத்தாய் குருவித்துறைக்கு உடனடியாக வருகை தந்தார். அதாவது ஆயுதங்களுடன் சுமார் 200 பேர் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தியதாக இவர் பின்னர் தெரிவித்தார். அதாவது, “குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருந்த தாயையும் சாதி வெறியர்கள் விட்டுவைக்கவில்லை” என்றார் பொன்னுத்தாய். மேலும் இதே ஊரில் தலித்துகள் ஒவ்வொரு மாதமும் 20-ம் தேதிக்கு மேல்தான் கடைகளில் சாமான்கள் வாங்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது என்றார்.
இந்நிலையில் உயர் சாதி இந்துக்கள் ஆதிக்கம் அதிகமுள்ள சோழவந்தான் வாக்குச்சாவடியில் வாக்களிக்க மாட்டோம் என்று தலித் பிரிவினர் மறுத்துள்ளனர். இவர்களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.