

திருவாரூர்: தமிழகத்துக்கும், சதுரங்க விளையாட்டுக்கும் உள்ள பழமையான தொடர்பை உலகறியச் செய்யும் வகையில், பூவனூரில் உள்ள சதுரங்க வல்லபநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்திய பிறகு, மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு திருவடிக்குடில் சுவாமிகள் வலியுறுத்தியுள்ளார்.
மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற வேண்டி, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை அடுத்த பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் தலைமையில் கடந்த 18-ம் தேதி சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது, சதுரங்கப் பலகையை வைத்து கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரையில் உள்ள 127 திருத்தலங்களில் 103-வது தலமாக போற்றப்படுவது பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் ஆகும். திருநாவுக்கரசு நாயனார் தேவாரப் பதிகம் அருளிச் செய்த தலம்.
இத்தலத்தின் வரலாற்றின்படி சிவபெருமானும், சதுரங்க ஆட்டத்தில் சிறந்து விளங்கிய இவ்வூர் மன்னன் மகள் உமையவளும், இத் தலத்தில் சதுரங்கம் விளையாடியதாகவும், அதில் சிவபெருமான் வெற்றி பெற்று மன்னனின் மகளை திருமணம் செய்து கொண்டதாகவும் புராண வரலாறு கூறுகிறது.
அதன் அடிப்படையில், இந்தியாவில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்துதான் இந்த விளையாட்டு ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகளுக்கு சென்று இருக்கிறது. இதில் சிற்சில மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.
எனவே, பழமையான இக்கோயில் குறித்த செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், இந்த விளையாட்டுக்கும், தமிழகத்துக்கும் உள்ள பழமையான தொடர்பை உலகறியச் செய்யவும் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தி, சர்வதேச சதுரங்க போட்டிகளை தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.