

தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்கும் விழாவில் கலந்துகொள்ள வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்ததால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 6-வது முறையாக முதல்வராக பதவி ஏற்றார். பதவியேற்பு விழா சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள வெளியூரில் இருந்து அதிமுக தொண்டர்கள் நேற்று முன்தினமே சென்னைக்கு வந்ததால், இரவு 10 மணி வரை தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், வெளியூரில் இருந்து வரும் பஸ்களும், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்களும் புறநகர் பகுதிகளில் நீண்ட வரிசையில் நின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. புறநகர் பகுதிகளை கடந்து செல்லவே சுமார் ஒரு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், சென்னையின் உட்புற பகுதிகளில் கார், வேன், ஆட்டோக்கள் மூலம் தொண்டர்கள் நேற்று புறப்பட்டு சென்றனர். இதனால் ஜிஎஸ்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, வேளச்சேரி நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் சாலை, வால்டாக்ஸ் சாலை, ஆற்காடு சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக அண்ணா சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலையில் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் நத்தைபோல் ஊர்ந்து சென்றதால் வேலைக்கு செல்வோர் அவதிப்பட்டனர். சில இடங்களில் வாகன ஒட்டிகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டனர்.