

தமிழகத்தில் எந்த துறையிலும் முன்னேற்றம் இல்லை என்று காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கூறினார்.
திருச்சி கிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு தாராநல்லூர் கீரைக்கொல்லை, காஜாபேட்டை பகுதிகளில் குஷ்பு பேசியது:
தமிழகம் எந்த துறையிலும் முன்னேறவில்லை. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவே காரணம். தமிழகத்தில் எங்கும் ஊழல் நிறைந்துள்ளது. அதிக ஊழல் செய்தவர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களில் அதிமுக பிரமுகர்கள், அமைச்சர்கள், கவுன்சிலர்கள்தான் வருகின்றனர். அவர்கள் மீது முதல்வர் ஜெயலலிதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்தபடி தமிழ்த் தாய்க்கு சிலை வைக்கவில்லை. ஒருவேளை சிலை அமைத்திருந்தால், அதன் கையில் இரட்டை இலையை வைத்துவிட்டு, நெற்றியில் ஜெயலலிதா ஸ்டிக்கரை ஒட்டியிருப்பார்கள்.
2011-ல் மாற்றம் வேண்டுமெனக் கருதி அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சென்னை ஆர்.கே. நகரில் ஜெயலலிதா பிரச்சாரம் முடித்து திரும்பியபோது, அந்த தொகுதிக்கு உட்பட்ட மணலி தெருவில் மின்சாரம் தடைபட்டது. அவர் தொகுதியிலேயே மின்சாரம் இல்லாத நிலையில், மின் மிகை மாநிலம் என்று ஜெயலலிதா கூறி வருவது வேடிக்கையாக உள்ளது. மின் துறை அமைச்சர் மீது ரூ.575 கோடிக்கு ஊழல் புகார் எழுந்துள்ளது என்றார்.
குடையை மறுத்த குஷ்பு…
திருச்சி கீரைக்கொல்லை பகுதியில் நேற்று முன்தினம் இரவு குஷ்பு பிரச்சாரம் செய்தபோது, திடீரென மழை பெய்யத் தொடங்கியது. வேனிலிருந்த ஒருவர் குஷ்புவுக்கு குடை பிடிக்க முயன்றார். இதைக் கண்ட குஷ்பு, “குடை வேண்டாம். மக்களே மழையில் நனைந்து கொண்டிருக்கும்போது நமக்கு என்ன?” என்று மறுத்துவிட்டார். தொடர்ந்து, மழையில் நனைந்தவாறே பிரச்சாரம் செய்தார்.