Published : 18 Jun 2014 01:03 PM
Last Updated : 18 Jun 2014 01:03 PM

இலங்கையில் இஸ்லாமியர் மீது தாக்குதல்: மத்திய அரசு குரல் கொடுக்க கருணாநிதி கோரிக்கை

இலங்கையில் இனவெறி தாக்குதலுக்குள்ளாகும் இஸ்லாமியர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை வெள்ளையரிடமிருந்து பெற்றுக்கொண்ட நாள் முதலாக, பெரும்பான்மைச் சிங்களவர், அரசியல் சட்ட நெறிமுறைகளின்படி சிறுபான்மையினரான தமிழர்கள், இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பளித்து அரவணைத்து ஆட்சி செலுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்கெதிரான மோதல் போக்கினையே தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள்.

இலங்கை அரசின் இத்தகைய மோதல் போக்கின் காரணமாகவே, இலங்கையில் சிறுபான்மை மக்களாக உள்ள தமிழர்களைத் தாக்கிச் சின்னாபின்னப்படுத்திய சிங்கள வெறியர்கள், கடந்த சில நாட்களாக மற்றொரு சிறுபான்மைப் பகுதியினரான முஸ்லீம்கள், அவர்கள் தமிழ் பேசுபவர்கள் என்பதால் அவர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளார்கள்.

2012ஆம் ஆண்டு மியான்மர் நாட்டில் புத்த மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தின் எதிரொலியாகவும், தொடர்ச்சியாகவும் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும், இந்த இரு பிரிவினருக்கும் இடையே அடிக்கடி வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் கொழும்பு நகருக்கருகில் அலுதமா பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் திடீரென வன்முறை மூண்டு, முஸ்லீம்கள் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த மோதலில் 3 பேர் பலியாகியிருக்கிறார்கள்.

100க்கு மேற்பட்டோர் படுகாயமுற்றிருக்கிறார்கள். மேலும் பள்ளிவாசல்களும், முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகளும், கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையே இலங்கை அரசின் அமைச்சர் பைசர் முஸ்தபா என்பவர், கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போது மற்றொரு பிரிவைச் சேர்ந்தவர்கள், அவரைத் தடுத்து நிறுத்திய தோடு, அவரைக் கல்லூரியிலிருந்து வெளியேற விடாமல் சிறைப் பிடித்திருக்கிறார்கள்.

பின்னர் காவலர் வந்து ஒரு மணி நேரத்துக்குப் பின் அவரை மீட்டிருக்கிறார்கள். முஸ்லீம்களுக்கு எதிராக புத்த மதத்தினர் மற்றும் இலங்கை அரசின் ஆதரவு பெற்ற குழுக்கள் இந்தத் தாக்குதலை நடத்தி வருகிறார்கள்.

சிறுபான்மை முஸ்லீம்களுக்கு எதிரான இலங்கையின் இந்தக் கடினமான போக்குக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வேறு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகிறார்கள். இலங்கை அரசைக் கண்டித்து தமிழகத்திலே போராட்டம் நடத்திப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இது குறித்து இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் எதுவும் தெரிவிக்காத நிலையில் இருக்கின்றன.

இலங்கையில் இதுவரை தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தி இனப்படுகொலை நடத்தி முடித்ததை அடுத்து, இஸ்லாமியர்களும் கடுமையாகத் தாக்கப்படுகின்ற நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இங்கேயுள்ள மத்திய, மாநில அரசுகள் குரல் கொடுக்க முன்வரவேண்டும்". இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x