

மாணவி உயிரிழப்பு, அதைத் தொடர்ந்த கலவரத்தால் கள்ளக் குறிச்சி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் மாற்றப்பட்டு, புதிய கண்காணிப்பாளராக பகலவன் பொறுப்பேற்றுள்ளார்.
மாவட்டத்தில் அமைதியான சூழலை உரு வாக்குவதே தனது முதல் பணியாக இருக்குமென தெரிவித்துள்ளார்.
காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பகலவன் கூறியது:
கலவர சம்பவத்தை தொடர்ந்து,சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் முன்னுரிமை அளிக்கப்படும். பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அனைத்தையும் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிபிசிஐடி போலீஸாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை வழக்கம்போல அமைதியான மாவட்டமாக பேணுவதில் மக்களுடைய அன்பும், ஆதரவும் வேண்டும். கள்ளக்குறிச்சி மக்கள் அனைவரும் தாங்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர வேண்டும் என்பதே எனது முக்கிய நோக்கமாக இருக்கும்.
மாணவியின் இறப்பு மிகவும் சோகமான நிகழ்வு, உயரதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து மாணவியின் உடல் நல்லடக்கம் செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,
பள்ளியில் தொடர்ந்து பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதன் முழு விவரத்தையும் பாதுகாப்பு கருதி தற்போது கூற இயலாது. எங்களின் முதலாவது முன்னுரிமை, சகஜ நிலையை கொண்டு வருவது மட்டுமே. இந்த வழக்கின் விசாரணையை சிறப்பு புலனாய்வு குழு மற்றும் சிபிசிஐடி நடத்தி வருகிறது. இந்த வழக்கின் அடுத்த கட்டம், அடுத்தடுத்து அவர்களின் விசாரணையைத் தொடர்ந்து தெரியவரும்.
இந்த கலவரம் தொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது நடவடிக்கை தொடரும்; அதற்கான கட்டாயம் இருக்கிறது.
இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல்வேறு வழிகளில் வழக்கு தொடர்ந்து வருகிறோம். அவை அனைத்தும் ஒவ்வொரு சூழலுக்கு ஏற்ப அமையும். பள்ளி மாணவி எந்த சூழலில் இறந்ததற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறோம்.
தற்போது இங்கிருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முழுவதுமாக சரி செய்யும் முயற்சியை செய்து வருகிறோம். மேலும், இந்த வழக்கு தொடர்பாக எங்கள் தரப்பில் சின்ன தரவுகளை கூட வெளியிட மாட்டோம். இதில் தடயவியல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டியது உள்ளது. அதன் பிறகே இந்த வழக்கு தொடர்பான விஷயங்களை விளக்க முடியும் என்று கண்காணிப்பாளர் தெரி வித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள தனியார் பள்ளியின் தாளாளர், செயலாளர், முதல்வர் மற்றும் இரு ஆசிரியர்கள் மீது குற்றவியல் தண்டனை சட்டம் 306 பிரிவின் கீழ் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணையில் என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்து வருகிறது என்று தெரிவித்தார்.