Published : 29 May 2016 04:14 PM
Last Updated : 29 May 2016 04:14 PM

மீனவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்

மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நரிக்குறவர் இனத்தை பழங்குடியினர் வகுப்பில் சேர்ப்பதற்கான சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு திமுக சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கையை திமுக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. எங்களது நீண்ட நாள் கோரிக்கை உங்கள் அமைச்சரவையின் மூலம் நிறைவேறியுள்ளது மிகுந்த திருப்தியை அளிக்கிறது.

மத்திய அமைச்சரவையின் இந்த முடிவால் நரிக்குறவர் சமூகத்தினர் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேறுவார்கள். இந்த சூழலில், நான் உங்களுக்கு மேலும், ஒரு கோரிக்கையை முன் விரும்புகிறேன். தமிழகத்தில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ள தலித்துகளும், பழங்குடியினரும் தற்போது அதே பிரிவில் தொடர முடியாத நிலையுள்ளது. மதசார்பாற்ற இந்திய நாட்டில், மதம் என்பது அவரவர் உரிமை.

இதற்கு முன்பு புத்த மதத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு சென்றவர்கள், சீக்கியத்திலிருந்து கிறிஸ்தவத்துக்கு சென்றவர்கள் அவர்கள் அனுபவித்த சலுகைகளை அப்படியே அனுபவிக்கின்றனர். எனவே, கிறிஸ்தவ மதத்துக்கு மாறுகிற, தலித் மற்றும் பழங்குடியினர் எஸ்.சி/எஸ்.டி பிரிவிலேயே இருக்கும்படி ஆணையிட வேண்டும். இது தொடர்பாக திமுக 1996, 2006, 2010-ல் மத்திய அரசுக்கு கடிதங்களை எழுதியுள்ளது.

மேலும், மீனவர் சமூகத்தை சார்ந்தவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். புவியியல் அமைப்பின் காரணத்தால் மிகவும் பின் தங்கியுள்ள மீனவர்களின் வாழ்க்கை கடலில் தான் கழிகிறது. இதனால் அவர்கள் வெளியுலக தொடர்புகளுக்கு வருவது கிடையாது. எனவே, அவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தால் அவர்கள் தங்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலையில் உயர்வினை சந்திக்க முடியும். என்னுடைய இந்தக் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றினால் நான் பெரிதும் மகிழ்ச்சியடைவேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x