Published : 10 May 2016 02:35 PM
Last Updated : 10 May 2016 02:35 PM

தவறுகளை திருத்திக்கொள்ள தயார்: ஊழல் விவகாரத்தை முன்வைத்து மு.க.ஸ்டாலின் பேட்டி

"தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். இதை ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நானே மக்களிடம் நேரடியாக சொல்லி வருகிறேன்" என்றார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு, வாக்குறுதிகள், எதிர்கால திட்டங்கள் குறித்து என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

அந்தப் பேட்டியின் விவரம்:

கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் கட்சி மீதான ஊழல் புகார் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த தேர்தலில் அந்த ஊழல் பிரச்சினையை எப்படி கையாள்கிறீர்கள்?

தெரிஞ்சோ, தெரியாமலோ செய்த தவறுகளை திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம் என ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் நானே மக்களிடம் நேரடியாக சொல்லி வருகிறேன். நிதி சார்பாகவோ, அரசு அங்கீகாரம் தொடர்பாகவோ எங்கள் ஆட்களே சில தவறுகள் செய்திருக்கலாம். ஆனால், மீண்டும் ஆட்சி அமைந்தால் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாது என்பதை நிச்சயமாக உறுதியளிக்கிறேன். அதற்காகத் தான் திமுக தேர்தல் அறிக்கையிலேயே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்படும் என வாக்குறுதி அளித்திருக்கிறோம்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மக்களிடம் முன்வைக்கும் முக்கிய வாக்குறுதி 'வள்ர்ச்சி'. தமிழக இளைஞர்கள் மாநிலத்தில் வளர்ச்சி ஏற்பட விரும்புகின்றனர். வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இளைஞர்களின் இந்த இரண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம் நோக்கம்.

பின் தங்கியுள்ள தமிழகத்தை முன்னெடுத்துச் செல்ல என்ன செய்வீர்கள்?

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் இல்லாத அரசாங்கத்தை நடத்துவோம். வெளிநாட்டு முதலீடு ஊக்குவிக்க சிங்கிள் விண்டோ சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படும். தொழில் தொடங்க அனுமதி கோரிய 100 நாட்களில் பரிசீலனை செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும். அதேபோல் தொழில் தொடங்க விரும்பும் உள்ளூர் வாசிகளுக்கும் சலுகைத் திட்டங்கள் வைத்திருக்கிறோம்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் மத்திய அரசுடனான நட்பு எப்படி இருக்கும்?

ஒரு பிரச்சினையும் இருக்காது. மத்திய அரசுடன் இசைந்து போவாம்.

மோடியுடனான உங்கள் உறவு எப்படி இருக்கும்?

எந்தப் பிரச்சினையும் இருக்காது.

காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளீர்கள்? லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டீர்கள்? எப்படி சமரசம் ஏற்பட்டது?

காங்கிரஸ் கட்சியுடன் ஏற்கெனவே கூட்டணியில்தான் இருந்தோம். இடையில், இலங்கைப் பிரச்சினையால் சிறிய பிரிவு ஏற்பட்டது.

உங்கள் குடும்ப சர்ச்சைகள் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறதே?

அது எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட பரப்புரை.

தேமுதிக - மந கூட்டணியால் யாருக்கு அதிகம பாதகம்?

அதிமுகவுக்கு மட்டுமே. அதிமுக ஓட்டுகள் மட்டுமே பிரியும். திமுகவை பொருத்தவரை விஜயகாந்த முக்கியமானவர் அல்ல.

திமுகவில் ஏன் இன்னமும் அதிகார மாற்றம் ஏற்படவில்லை?

திமுக தலைவர் கருணாநிதி 93 வயதானாலும் 39 வயது இளைஞர் போல் சிறப்பாக பணியாற்றி வருகிறாரே!

பேட்டியின் வீடியோ வடிவம்..