Last Updated : 20 Jul, 2022 06:31 PM

 

Published : 20 Jul 2022 06:31 PM
Last Updated : 20 Jul 2022 06:31 PM

புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை நிச்சயமாக அமல்படுத்தப்படும்: தமிழிசை உறுதி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | கோப்புப் படம்.

புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் நிச்சயமாக அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.

அரவிந்தோ சொசைட்டியில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஏற்ப பள்ளிகளை உருவாக்கும் நிகழ்வில் பங்கேற்ற பிறகு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''புதுச்சேரியில் அரசுப் பள்ளிகளில் கல்வியில் தரத்தை உயர்த்தவும், டிஜிட்டல் வகுப்பறை அமைத்து நவீனமாக்க தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும். புதிய கல்விக் கொள்கையில் எந்த மொழியையும் திணிக்க வழியில்லை. மொழி சொல்லி தருவதை மாநிலங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

தாய்மொழி கல்வியைதான் புதிய கல்விக்கொள்கையில் வலியுறுத்தியுள்ளார்கள். தாய்மொழியில் பேசினாலும், தாய்மொழியில் எவ்வளவு பேர் கற்கிறார்கள்? தாய்மொழி கல்வி பின்வரிசையில்தான் உள்ளது. ஆங்கில வழிக்கல்வியைதான் பெருமையாக பேசுகிறார்கள். நோபல் பரிசு வென்ற பலரும் தாய் மொழியில் கற்றவர்கள்தான். அதனால்தான் தாய்மொழிக்குதான் முக்கியத்துவம் தருகிறோம். குழந்தைகளின் கிரகிப்பு தன்மை மேம்படும். வேறுமொழிக்கோ, திணிப்பு மொழிக்கோ புதிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் தரவில்லை.

புதிய கல்விக் கொள்கையை முழுவதுமாக படியுங்கள். திடீரென்று கொண்டு வரவில்லை. பல நன்மைகள் இருக்கிறது. இடைநிற்றல் இருக்காது. குழந்தைகளை வகுப்பறை தாண்டி உலக அரங்கில் உயர்ந்தவர்களாக மாற்றவேதான் இம்முறை அமலாகிறது.

தற்காப்புக் கலையை அனைத்து பள்ளிகளிலும் சொல்லித்தர வேண்டும். புதுச்சேரியிலும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பேன். அதேபோல் குழந்தைகளுக்கும் கவுன்சிலிங் தர ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படும்.

தமிழக பாடத்திட்டத்தோடு புதுச்சேரி, காரைக்கால் இணைந்துள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வர முயற்சித்து வருகிறோம். கல்வி வாரியம் தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கவேண்டும்.

புதிய கல்விக் கொள்கை புதுச்சேரியில் நிச்சயமாக அமல்படுத்தப்படும். முதலிலேயே எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்திப்போம். வருங்காலம் சவாலான காலம். உலகரங்களில் போட்டியிட வேண்டும். சவால்களை சந்திக்க குழந்தைகளை தயார் செய்யவே புதிய கல்விக்கொள்கை. அட்சயபாத்திரா திட்டத்தில் தரப்படும் மதிய உணவு தொடர்பாக கருத்துகள் கேட்டு வருகிறோம்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x