“மத்திய அரசின் முகவர் போல நடந்துகொள்கிறது காவிரி மேலாண்மை ஆணையம்” - அமைச்சர் துரைமுருகன்

“மத்திய அரசின் முகவர் போல நடந்துகொள்கிறது காவிரி மேலாண்மை ஆணையம்” - அமைச்சர் துரைமுருகன்
Updated on
1 min read

புதுடெல்லி: "மத்திய நீர் ஆணையமும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும் தற்போது நியாயப்படி நடக்கவில்லை. மத்திய அரசின் முகவர் போல நடந்துகொள்கின்றன. எனவேதான் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது" என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

டெல்லியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "இதற்கு முன் தீர்ப்பாயம், பின்னர் நீதிமன்றம் இரண்டிலும் காவிரி தொடர்பான வழக்கை விசாரித்தனர். இந்த இரண்டு விசாரணையிலும், மேகதாது என்று கர்நாடகா உச்சரிக்கவில்லை. தீர்ப்பாயத்தின் தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிலும் மேகதாது என்ற வார்த்தை இடம்பெறவில்லை.

இவை முடிந்தபின்னர், தற்போது திடீரென்று வந்து மேகதாதுவில் அணை கட்டப்போகிறோம். அதனால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். எனவே எங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளனர். இதற்கு காவிரி நதி நீர் மேலாண்மை வாரியமும் தங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருந்தது. காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு என்னென்ன அதிகாரம் உண்டு என்பதை நீதிமன்றம்தான் கூறியது.

அதேபோல், நீதிமன்றம் மேகதாது குறித்து விசாரிக்க அனுமதி வழங்கவில்லை. ஆனால், கர்நாடக அரசு ஒரு வழக்கறிஞரின் ஒப்புதலைப் பெற்றுக்கொண்டு, எங்களுக்கு சட்ட ஆலோசகர் ஒப்புதல் வழங்கியதாக கூறி, உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை பெறாமல், மத்திய அரசு தங்கள் பக்கம் உள்ளது என்ற தைரியத்தில், மேகதாது குறித்து பேச வேண்டும் என்றனர்.

தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, மேலும் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தது. அதனடிப்படையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு வரும் வரை, மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்குமுன், காவிரி மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் கூடினால் கூட இதுதொடர்பாக விவாதிக்க முடியாது. அடுத்த விசாரணையிலும் தமிழக அரசு தரப்பு வாதங்களை விரிவாக முன்வைப்போம்.

மத்திய நீர் ஆணையமும், காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையமும் தற்போது நியாயப்படி நடக்கவில்லை. மத்திய அரசின் முகவர் போல நடந்துகொள்கின்றன. எனவேதான் தமிழக அரசு உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது" என்று அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in