Last Updated : 20 Jul, 2022 11:19 AM

 

Published : 20 Jul 2022 11:19 AM
Last Updated : 20 Jul 2022 11:19 AM

இடைக்கால அரசில் மலையர், தமிழர், முஸ்லிம்களும் இடம்பெற வேண்டும்: இலங்கை விவகாரத்தில் விசிக வலியுறுத்தல்

புதுடெல்லி: இலங்கையில் இடைக்கால அரசு அமைய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதில், சிங்களவருடன் மலையர், தமிழர் மற்றும் முஸ்லிம்களும் இடம்பெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக நேற்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விசிக தலைவர் தொல். திருமாவளவன், பொதுச்செயலாளர் டி.ரவிகுமார் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது, மத்திய அமைச்சர்களிடம் தங்கள் கட்சி சார்பில் மத்திய அரசிற்கு ஒரு கோரிக்கை கடிதம் சமர்ப்பித்தனர்.

இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் பின்வருமாறு: இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு பாதுகாப்பு நலன்களையும், பொருளாதார நலன்களையும் சார்ந்ததாக இருக்கக்கூடாது. அந்த நாட்டின் மக்களுடைய நலன் சார்ந்ததாக இருக்கவேண்டும். இலங்கையில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதாக ஒரு இடைக்கால அரசு அமைப்பதற்கு இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இதில், சிங்களவர்களின் பிரதிநிதிகள், தமிழர் பிரதிநிதிகள், மலையகத்தில் உள்ளவர்களின் பிரதிநிதிகள், முஸ்லிம்களின் பிரதிநிதிகள் பங்குபெறுவதை உறுதி செய்யவேண்டும். ராணுவத்தையும், அடக்குமுறை சட்டங்களையும் பயன்படுத்துவதை இலங்கையின் தற்காலிக அதிபர் கைவிட வலியுறுத்தவேண்டும். இலங்கை மக்களின் விருப்பம்போல வல்லுநர்கள், அறிவுஜீவிகளைக் கொண்ட குழு ஒன்றை அமைத்து அதன் வழிகாட்டுதலில் இடைக்கால அரசு செயல்பட வேண்டும்.

அயல்நாடுகளிலிருந்து ராணுவ உதவி பெறுவதை தவிர்க்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கையின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்கு இடைக்கால திட்டம் ஒன்றை தயாரிக்க இந்திய அரசு உதவ வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ளவாறு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை உறுதி செய்ய இந்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழ்நாட்டு மீனவர்களை தாக்கும் போக்கை நிறுத்தவேண்டுமென இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

2022 செப்டம்பரில் நடைபெறவுள்ள UNHRC கூட்டத்தில் 2009 இல் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கிடைப்பதற்கான முயற்சிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

இந்திய அரசு 2009 இல் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு உடன்படுமாறு புதிதாக அமையும் அரசை வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தவும் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x