

சென்னை: தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
மேலும், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதாக பழனிசாமி அறிவித்தார். அதேபோல, பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக ஓபிஎஸ் அறிவித்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி, அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளதாக அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி நேற்று அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், “சென்னையில் கடந்த 17-ம் தேதி எனது தலைமையில் நடைபெற்ற அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், துணைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இது தொடர்பான கடிதத்தை, எதிர்க்கட்சிக் கொறடா எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் செயலர் அலுவலகங்களில் வழங்கினார்.
இந்நிலையில், நேற்று காலை பழனிசாமியை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சாமானிய தொண்டனுக்கு இந்த வாய்ப்பை பழனிசாமி வழங்கியுள்ளார். அவரது தலைமையில், அவர் காட்டும் வழியில் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றார்.
எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தற்போது கரோனா பாதிப்புக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது ஆதரவாளர்கள், பழனிசாமி தரப்பினரின் இந்த நடவடிக்கையை எதிர்கொள்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
வழக்கறிஞர்களுடன் ஆய்வு: அப்பாவு
இந்நிலையில், திருநெல்வேலியில் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம், அதிமுக சார்பில் புதிதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி, சென்னையில் எனது அலுவலகத்துக்கு சென்று, உதவியாளரிடம் கடிதம் கொடுத்துச் சென்றுள்ளார். இதேபோல, கடந்த வாரம் ஓபிஎஸ் ஒரு கடிதம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தலைவர் என்ற முறையில், ஜனநாயக முறையிலும், சட்டப்படி, விதிப்படி, நியாயமாக, ஒருதலைபட்சமின்றி இந்தக் கடிதங்களை பரிசீலித்து, தக்க நடவடிக்கை எடுப்பேன்.
எனக்கோ அல்லது தமிழக முதல்வருக்கோ, தனிப்பட்ட முறையில் யார் மீதும் விருப்பு, வெறுப்பு எதுவும் கிடையாது.
என்னைப் பொறுத்தவரையில், அதிமுக எம்எல்ஏ-க்கள் 66 பேரும் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுவர்கள்தான். யார் கட்சி செயலாளர் என்பது அவர்கள் உட்கட்சி விவகாரம். இதை அவர்கள்தான் சரிசெய்து கொள்ள வேண்டும். அவர்கள் கொடுத்துள்ள கடிதங்கள் தொடர்பாக சட்டப்பேரவை விதிகளை ஆராய்ந்தும், வழக்கறிஞர்களுடன் ஆலோசித்தும் தக்க முடிவு எடுப்பேன்” என்றார்.