Published : 20 Jul 2022 07:51 AM
Last Updated : 20 Jul 2022 07:51 AM
சென்னை: காலத்துக்கும் களத்துக்கும் ஏற்ற வகையில் இளைஞர் அணியின் செயல்பாடுகள் தொடரவேண்டும் என்று திமுக தொண்டர்களை முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: திமுக எப்போதும் இளைஞர்களின் பாசறையாக விளங்கும் இயக்கம். அதனால்தான் என் இளமைப் பருவத்திலேயே அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்டோரின் செயல்பாடுகளை கண்டு, அதனால் உந்துதல் பெற்று, ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’ என்ற அமைப்பைத் தொடங்கினேன். கட்சியின் பிரச்சார நாடகங்களில் மேடையேறினேன். கருணாநிதி உள்ளிட்டோர் உரைகளைப் பதிவு செய்து, முரசொலியில் அச்சிட ஏற்ற வகையில் எழுதித் தந்தேன்.
1980 ஜூலை 20-ம் தேதி கருணாநிதியால், மதுரை ஜான்சி ராணி பூங்காவில் திமுகவின் துணை அமைப்பான இளைஞர் அணி உருவாக்கப்பட்டது. அன்று எதிர்க்கட்சியாக இருந்த திமுகவை வலிமைப்படுத்த என்னிடம் இளைஞர் அணியின் செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. கருணாநிதி அறிவித்த எல்லாபோராட்டங்களிலும் முதன்மையாக நின்றது இளைஞர் அணி.
உதயநிதிக்கு பாராட்டு
இளைஞர் அணி தொடங்கப்பட்டு 42 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது அதை உதயநிதி சிறப்பாக முன்னெடுத்து வருவதைக் கண்டு தந்தையாக அல்லாமல், தலைவராக மகிழ்கிறேன். காலத்துக்கும் களத்துக்கும் ஏற்ற வகையில் அதன் செயல்பாடுகள் தொடரவேண்டும்.
இளைஞர் அணி சார்பில் ஒவ்வொரு தொகுதியிலும் பயிற்சிப்பாசறைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய வேகமும், இளைஞர்களிடம் லட்சியத்தை கொண்டு சேர்க்கும் வியூகமும், எதையும் தாங்கும் இந்த இயக்கத்தை கட்டிக் காத்து தமிழகத்தை உலக அளவில் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல துணை நிற்கக் கூடியதாகும்.
கருணாநிதி அளித்த ஐம்பெரும் முழக்கங்களான, ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம், இந்தி திணிப்பை எதிர்ப்போம், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம், மாநிலத்தில் சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி’ ஆகியவைதான் திராவிட மாடலின்இலக்கணம்.
அதை கடைபிடித்து, ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற லட்சியத்தைக் கொண்ட இயக்கத்தை கட்டிக்காக்கும் பெரும்பணியில் இளைஞர் அணியின் உறுதிமிக்க செயல்பாடுகள் தொடர வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT