

சென்னை: விண்வெளி ஆய்வில் அதிக முதலீடு செய்து கவனம் செலுத்த உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நேற்று கூறியதாவது: மத்திய கல்வி அமைச்சகத்தின் என்ஐஆர்எஃப் தரவரிசை மூலம் உயர்கல்வி நிறுவனங்கள் தங்கள் தரத்தை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. எதிர்காலத்தில் பாலிடெக்னிக், பள்ளிகளுக்கும் தேசிய தரவரிசை பட்டியல் வெளியிட வேண்டும்.
இணையவழி படிப்புகளில் சென்னை ஐஐடி சிறந்து விளங்குகிறது. இந்த ஆண்டில் மட்டும்சென்னை ஐஐடி 200 கண்டுபிடிப்புகளில் 170-க்கு காப்புரிமை பெற்றுள்ளது.
சென்னை ஐஐடியில் விண்வெளி ஆராய்ச்சி, ராக்கெட் இன்ஜின் உருவாக்கம், மருத்துவ தொழில்நுட்பம், கிராமப்புற மேம்பாடு உள்ளிட்டவற்றில் அதிக முதலீடு செய்து முப்பரிமாண முறையில் அதை செயல்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மாற்றுத் திறனாளிகளின் வாழ்வியல் முன்னேற்றத்துக்கான தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகளை உருவாக்க தனி குழு அமைத்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.