Published : 20 Jul 2022 07:20 AM
Last Updated : 20 Jul 2022 07:20 AM

மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: மின்கட்டணத்தை உயர்த்தும் தமிழக அரசின் முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில் உயர்த்தப்பட உள்ள மின் கட்டண விகிதங்களை ஏழை, நடுத்தர மக்களால் தாங்க முடியாது.

மின் கட்டணத்தை இந்த அளவுக்குஉயர்த்த தமிழக அரசு கூறியுள்ளகாரணங்கள் ஏற்க முடியாதவை. மின்வாரியத்தின் கடன்சுமை ரூ.1.59 லட்சம் கோடியாகவும், வட்டியாக செலுத்தப்படும் தொகைரூ.16,511 கோடியாகவும் அதிகரித்து விட்டதாகவும், அவற்றைசமாளிக்க மின் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் மின் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அவர் கூறும் அனைத்து காரணங்களுக்கும் நிர்வாக சீர்கேடுகள்தான் காரணம் என்பதை அவரது விளக்கத்தில் இருந்தே உணர முடியும். இவ்வாறாக யாரோ செய்த தவறுகளுக்காக, அப்பாவி மக்களை தண்டிப்பது நியாயம் அல்ல. எனவே, மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசு, சமீபத்தில் மருந்து விலையை உயர்த்தியதுடன் தற்போது அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டிவரி விதித்து வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசை காரணம் காட்டி மின் கட்டணத்தை தமிழக அரசு உயர்த்துவது மக்கள் உணர்வில் எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

கரோனா பரவல் காலத்தில், தமிழகஅரசு கடன் வாங்கும் அளவை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தபோது, மத்திய அரசின் மின் கட்டணக் கொள்கையை ஏற்க வேண்டும் என நிபந்தனை விதித்ததை மக்கள் மறந்து விடவில்லை. இந்தசூழலில் மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு நிறுத்தி வைத்து, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்துபகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பும் மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும்.

மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை. இப்போதும் 2 மாதத்துக்கு ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறை தொடரும் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உபயோகிக்கும் மின்சார யூனிட் அளவு கூடுதலாகவே வரும். எனவே, மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மாதம் ஒருமுறை கணக்கெடுக்கும் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பல வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சியில் அமர்ந்துள்ள திமுக, தற்போது விலைவாசி உயர்வுக்கு வழி வகுக்கும் அரசாக மக்களை வாட்டி வதைக்கிறது.

ஏற்கெனவே, கடுமையான விலைவாசி உயர்வால் மக்கள் விழிபிதுங்கி நிற்கும்நிலையில், தற்போது மின் கட்டணத்தை உயர்த்துவது அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தும். மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் சுமையை அரசு மறு பரிசீலனை செய்து உடனே திரும்ப பெற வேண்டும்.

தமாகா இளைஞர் அணி தலைவர் எம்.யுவராஜா: தற்போது நடைபெற்று வரும் திமுக அரசின் அறிவிப்புகள் என்பது நாளுக்குநாள் மக்களை சோதனைக்கும், வேதனைக்கும், அதிருப்திக்கும் உள்ளாக்கக்கூடிய அறிவிப்புகளாகவே உள்ளன. மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறையை கொண்டுவரப் போவதாக வாக்குறுதி அளித்தவர்கள் இப்போது அதுபற்றி வாய் திறக்கமறுக்கின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் அடிக்கடி கூறும் ‘சொல்லாததையும் செய்வோம்’ என்பதன் அர்த்தம் இதுதானா? ஏற்கெனவே விலைவாசி உயர்ந்துள்ள சூழ்நிலையில் சாதாரண மக்களை பாதிக்கும் வகையில் மேலும் மேலும் கட்டண உயர்வு என்பது மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு பாதிக்கும்.

கரோனா காலகட்டம் என்பதால் மக்களின் வருமானம் குறைந்து வரும் சூழ்நிலையில் இதுபோல, சாதாரண மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அரசின் மின் கட்டண உயர்வு மக்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல, வி.கே.சசிகலா, இந்திய தேசிய லீக் மாநில பொதுச் செயலாளர் ஜகிருத்தீன் அகமது, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் விஎம்எஸ் முஸ்தபா, எஸ்டிபிஐ மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது உள்ளிட்ட தலைவர்களும் மின் கட்டண உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x