Published : 20 Jul 2022 06:09 AM
Last Updated : 20 Jul 2022 06:09 AM

சின்னசேலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பள்ளி இனி செயல்படக் கூடாது என்ற நோக்கமா? - தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

கலவரம் நடந்த சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் சிபிசிஐடி போலீஸார் நேற்று 3-வது மாடியில் இருந்து உருவபொம்மையை கீழே வீசி, ஆய்வு செய்தனர்.

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு பள்ளி இனி செயல்படக் கூடாது என்ற நோக்கம் இருந்ததா என்பது குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகே உறுதியாக தெரிவிக்க முடியும் என்று தடயவியல் நிபுணர்கள் கூறினர்.

மாணவி மதி உயிரிழப்பைத் தொடர்ந்து, சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 17-ம் தேதி நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகம் தலைமையில் நிபுணர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் என்ன மாதிரியான பொருட்களைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர், என்ன ஆயுதங்களை பயன்படுத்தினர், வெடிபொருட்களை கொண்டு வந்தனரா என ஆய்வு செய்தனர்.

மேலும் தீ வைப்பு சம்பவங்களுக்கு பயன்படுத்திய எரிபொருள், வன்முறையாளர்களின் நோக்கம் உள்ளிட்டவை குறித்தும் விசாரணை மேற்கொண்டனர்.

‘தென் புரட்சியாளர்கள்’

அப்போது பள்ளி வளாகத்தில் இருந்த மதுபாட்டில்கள், சுத்தியல், தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சியின் அடையாளத்துடன் கூடியதுண்டு மற்றும் ‘தென் புரட்சியாளர்கள்’ என்ற பெயரிடப்பட்ட போராட்ட பதாகை உள்ளிட்டவற்றையும் கண்டெடுத்துள்ளனர்.

பள்ளியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பல், பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அனைத்தையும் சேதப்படுத்தி, அவற்றின் ஹார்டி டிஸ்க்கை எடுத்துச் சென்றுள்ளதும், சிலவற்றை சேதப்படுத்தி வீசியும் சென்றுள்ளதாக தடயவியல் சோதனையில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தடய அறிவியல் துணை இயக்குநர் சண்முகத்திடம் கேட்டபோது, “தடயங்களை சேகரித்து வருகிறோம். இந்தப் பள்ளிஇனி செயல்படக் கூடாது என்றநோக்கத்தின் அடிப்படையில் இந்த வன்முறை நடைபெற்றிருப்பதுபோல் இருக்கிறது. இருப்பினும் முழுமையான ஆய்வுக்குப் பின்னரே, அப்படித்தானா என்பதை உறுதியாக தெரிவிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x