Published : 20 Jul 2022 06:31 AM
Last Updated : 20 Jul 2022 06:31 AM

மாணவி உயிரிழப்புக்கு எங்களை பலிகடா ஆக்குவது சரியா? - சின்னசேலம் தனியார் பள்ளியின் மேற்பார்வையாளர் வேதனை

சுபாஷ்

கள்ளக்குறிச்சி: மாணவி உயிரிழப்புக்கு எங்களை பலிகடா ஆக்குவது எந்த விதத்தில் நியாயம்? என சின்னசேலம் தனியார் பள்ளியின் உரிமையாளரான ரவிக்குமாரின் நெருங்கிய உறவினரும், பள்ளியின் மேற்பார்வையாளருமான சுபாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: மாணவி ஸ்ரீமதி 6-ம் வகுப்பு முதல் எங்கள் பள்ளியில் தான் பயின்று வந்தார். நன்றாக படிக்கக் கூடியவர். பெற்றோரின் விருப்பத்தின்பேரில் மாணவியை எங்கள் பள்ளியில் இருந்து வேறு ஒரு பள்ளியில் சேர்த்தனர்.

அந்தப் பள்ளியை மாணவி விரும்பாததால் மீண்டும் கொண்டுவந்து எங்கள் பள்ளியிலேயே 15 தினங்களுக்கு முன்புதான் பெற்றோர் சேர்த்துவிட்டனர். விடுதியில் தங்கியிருந்த ஆசிரியர்களிடம் சகஜமாகதான் பழகியிருக்கிறார் ஸ்ரீமதி. 12-ம் தேதி இரவு தூங்கச் சென்றுள்ளார்.

13-ம் தேதி அதிகாலையில், பால்காரர்தான் கீழே விழுந்துகிடந்த மாணவியை முதலில் பார்த்திருக்கிறார். அவர் தந்த தகவலின் பேரில் அங்கிருந்தவர்கள் ஸ்ரீமதியை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனைக்கு பிறகு, மாணவி உயிரிழந்துவிட்டதாக டாக்டர் தெரிவித்தார்.

இதையடுத்துதான் அவரது பெற்றோருக்குத் தகவல் அளித்தோம். எங்களைப் பொறுத்தவரை பாதுகாப்போடுதான் மாணவியை வைத்திருந்தோம், அவர் விடுதியைவிட்டு வெளியேறும் நோக்கில் சென்று, தவறி விழுந்து இறந்தாரா, அல்லது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் குதித்தாரா எனத் தெரியவில்லை. அவரது கடிதம் தற்கொலையை உறுதிபடுத்துகிறது.

நாங்களும் முறையாக காவல்துறையிடம் புகார் அளித்தோம். காவல்துறையினர் விசாரணைக்கு ஒத்துழைத்தோம். 17-ம் தேதி காலையில் 600 பேருக்கு உணவு தயாரிக்க காவல் துறையினர் அறிவுறுத்தினர்.

உணவு தயாரித்துவிட்டு வெளியே வந்தபோது, 100-க்கும் குறைவான போலீஸாரே இருந்தனர். அதற்குப் பிறகு நடந்தவற்றை எங்களால் ஊகிக்கவும் முடியவில்லை. எதிர்கொள்ளவும் முடியவில்லை.

போராட்டக்காரர்கள் போர்வையில் வன்முறைக் கும்பல் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சகட்டு மேனிக்குத் தாக்கத் தொடங்கியது. எங்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பித்தால் போதும் என்று வெளியேறினோம்.

வாயில்லா ஜீவன்களான மாடுகளை கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மாட்டின் பால் சுரக்கும் மடியை பிளேடால் அறுத்துள்ளனர். பள்ளியில் இருந்த 40 மாடுகளில் 36 மாடுகளை கொண்டு சென்றுவிட்டனர்.

மாணவி தற்கொலையில் பள்ளியை சூறையாடிவிட்டார்கள். இதுஎந்தவிதத்தில் நியாயம்? மாணவிபற்றி அவருடைய தாயாருக்கு நன்றாகவே தெரியும். அப்படியிருந்தும் அவர் ஏன் பள்ளி மீது அபாண்டமாக குற்றம்சாட்டுகிறார் என்று தெரியவில்லை. மாணவியின் தாயார் கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. இந்த கலவரத்தால் சுமார் ரூ.30 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதை யார் ஈடு செய்வது? இன்று குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினரை, அன்றே குவித்திருந்தால் இத்தகைய நிலைஏற்பட்டிருக்காது. சமூக வலைதளத்தின் உண்மைத் தன்மையை அறியாயாமல், பெங்களூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தெல்லாம் வந்த இளைஞர்களும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களை இப்போதுபோலீஸார் கைது செய்திருக்கிறார்கள். மாணவி பற்றியும் தற்கொலை பற்றியும் சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மைகளும் வெளிவரும் என்று உறுதியாக நம்புகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x