Published : 20 Jul 2022 06:49 AM
Last Updated : 20 Jul 2022 06:49 AM

கள்ளக்குறிச்சி பள்ளி வளாகத்தில் நடந்த வன்முறையில் மாடுகளின் பால் சுரக்கும் காம்புகளை அறுத்த கலவரக்காரர்கள்: கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வேதனை

ஈரோடு: கள்ளக்குறிச்சி அருகே பள்ளி வளாகத்தில் நடந்த வன்முறையின்போது, மாடுகளின் பால் சுரக்கும் காம்புகளைக் கூட, கலவரக்காரர்கள் அறுத்துள்ளது வேதனையளிக்கிறது என கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த மாணவியின் மரணம், அவரது பெற்றோருக்கு மட்டுமல்லாது, சமுதாயத்துக்கே பேரிழப்பாகும். யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. விசாரணையைத் தீவிரப்படுத்தி இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும். ஆனால், இந்த சம்பவத்துக்கு தீர்வு வன்முறையாகாது.

பள்ளி வளாகத்தில் திட்டமிட்டே வன்முறை நடந்துள்ளதாகவே தோன்றுகிறது. போராட்டக்காரர்கள் நெருப்பு வைக்க தயராகவும், தாக்குதலுக்கு தேவையான சம்மட்டி போன்ற ஆயுதங்களுடன் நுழைந்திருக்கின்றனர். பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்களை போராட்டக்காரர்கள் எரிய வைத்திருக்கிறார்கள். அங்கிருந்து பல்வேறு பொருட்களை எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.

பள்ளி வளாகத்தின் உள்ளே இருந்த மாடுகளின் பால் சுரக்கும் காம்புகளை அறுத்து இருப்பது வேதனையிலும் வேதனை தருகிறது. இது சொல்ல முடியாத வேதனை.

இப்படிப்பட்ட போராட்டங்கள் எதிர்காலத்தில் தமிழகத்தில் நிகழக் கூடாது. போராட்டக்காரர்களால் சொத்துகளுக்கு மட்டும் இழப்பு ஏற்படவில்லை. 4,000-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், 350-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் சான்றிழ்கள் எரிந்துள்ளன. அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை போக்கும் வகையில், நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x