

சென்னை: சென்னையில் ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்று கோரி வந்த 1,93,460 விண்ணப்பங்களின் பேரில் 1,81,103 சான்றுகள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: இந்த கல்வியாண்டில் பள்ளிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு, ஜாதி, இருப்பிடம், வருவாய் சான்றிதழ்கள் தாமதமின்றி கிடைக்கும் வகையிலும், மக்களின் பிற சான்றுகள் தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலித்து உடனடியாக வழங்கவும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் பெறப்பட்ட 1,93,460 விண்ணப்பங்களில் 1,81,103 சான்றுகள் சென்னை மாவட்டத்தில் உடனடியாக வழங்கப்பட்டுள்ளன.
உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் அதிகளவில் வரப்பெற்றுள்ளதால், அவற்றை விசாரித்து தீர்வு காணும் வகையில் வழங்கப்பட்ட அறிவுரையின் பேரில், சென்னை மாவட்டத்தில் பெறப்பட்ட 33,326 உட்பிரிவு இல்லாத மனுக்களில் 29,137 மனுக்களுக்கும், உட்பிரிவு உள்ள 14,472 மனுக்களில் 10,791 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மாவட்டத்தில் அரசின் புதிய அறிவிப்பின்படி கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் 72 மனுக்கள் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசாணை எண் 612-ன்படி நகர அளவை பதிவேடுகள், கணினி பட்டா ஆகியவற்றை ஒப்பிட்டு திருத்தங்கள் செய்யப்பட்டதில் சென்னை மாவட்டத்தில் 67,748 பிழைகள் கண்டறியப்பட்டு, 48,074 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, 20,800 கணினியில் சரி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், வருவாய்த் துறை செயலர் குமார் ஜயந்த், நில நிர்வாக ஆணையர் சு.நாகராஜன், சமூக பாதுகாப்பு திட்ட ஆணையர் ந.வெங்கடாச்சலம், நில நிர்வாக கூடுதல் ஆணையர் ச.ஜெயந்தி, ஆய்வு மற்றும் தீர்வு இயக்குநர் டி.ஜி.வினய், சென்னை மாவட்ட ஆட்சியர் சு.அமிர்த ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
33,326 உட்பிரிவு இல்லாத மனுக்களில் 29,137 மனுக்களுக்கும், உட்பிரிவு உள்ள 14,472 மனுக்களில் 10,791 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது.