

திருத்தணி: திருத்தணி சுப்பிரமணிய கோயிலில் ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது. இக்கோயிலில் வரும் 21-ம்தேதி முதல் 25-ம் தேதி வரை ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழா நடைபெற உள்ளது.
இத்திருவிழாவுக்கான முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பாக நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், அமைச்சர் சேகர்பாபு, கோயில் படிக்கட்டுகள், நல்லான்குளம், சரவண பொய்கை திருக்குளம், சித்த மருத்துவமனை, காது குத்தும் மண்டபம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள்குறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினார்.
மேலும், ராஜகோபுரத்தை இணைக்கும் படிக்கட்டுகள் அமைக்கும் பணி, வெள்ளித் திருத்தேர் அமைக்கும் பணிகள் குறித்தும், கோயிலுக்கு மாற்று பாதை அமைப்பது குறித்தும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்விற்குப் பிறகு, அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: திருத்தணி சுப்பிரமணிய கோயிலில் ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா நடைபெறும் 5 நாட்களில் 24 மணி நேரமும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அன்னதானம் வழங்கப்படும். மேலும், இந்த 5 நாட்களில் 24 மணி நேரமும் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் தேவையான அளவுக்கு வெளிச்சம் ஏற்படும் அளவுக்கு ஒளி வசதி ஏற்படுத்த உள்ளோம்.
ஆடிக் கிருத்திகை தெப்பத் திருவிழாவுக்காக கடந்த ஆண்டை விட கூடுதலாக 20 சதவீத பேருந்துகளை இயக்கவும், 3 சிறப்பு ரயில்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், அதிக வெப்பம் காரணமாக பக்தர்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவசர உதவிக்கான தொலைபேசி எண்ணை வெகு விரைவில் அறிவிக்க இருக்கிறோம்.
திருவள்ளூர் மாவட்ட போலீஸார்மட்டுமல்லாமல், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த போலீஸார் என போதிய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
இந்த ஆய்வின்போது, ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், இந்துசமய அறநிலையத் துறை கூடுதல் இயக்குநர் ஆணையர் திருமகள், இணை ஆணையர்(வேலூர்) லட்சுமணன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி, திருத்தணி துணை காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.