

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மானாமதுரை (தனி) தொகுதியை, அதிமுகவினர் ‘மானம் காத்த மானாமதுரை’ என அழைப்பது உண்டு. கடந்த 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நான்கு தொகுதிகளில் மானாமதுரை தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மலைச்சாமி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றபோது, அவருக்கு கை கொடுத்தது மானாமதுரை தொகுதி. எனவே, அதிமுகவின் மானம் காத்த மானாமதுரை தொகுதி என அடைமொழியோடு அழைப்பது வழக்கம்.
தற்போதைய சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக மாரியப்பன் கென்னடி களமிற ங்கியுள்ளார். மானாமதுரை அருகே இடைக்காட்டூர் சொந்த ஊர். இவரது மனைவி ராஜேஸ்வரி டிஎஸ்பியாக சென்னையில் பணிபு ரிவதால் தற்போது அங்கே தங்கி உள்ளார்.
மாவட்ட மாணவர் அணி துணைத் தலைவர், கூட்டுறவு வங்கித் தலைவர் என மேல்மட்ட அரசியல் செய்பவர். அவரது தந்தை சோனைமுத்து ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் மகனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒன்றிய செயலாளராகவும், இருமுறை எம்எல்ஏவாகவும் உள்ள எம்.குணசேகரன் மீதான அதிருப்தி, கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்படாதது ஆகியவை அதிமுகவுக்கு பாதகமாக உள்ளன. இதனால் தொகுதிக்குள் குணசேகரன் எம்எல் ஏவை பிரச்சாரத்துக்கு அழைத்துச் செல்லாதது மாரியப்பனுக்கு சாதகமாக உள்ளது.
திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ் மகள் சித்ராசெல்வி போட்டியிடுகிறார். இவர் கட்சியில் எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. இவரது கணவர் பாலமுருகன். இவர் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் என்பதால் இரண்டு பெண் குழந்தைகளுடன் சென்னையில் தங்கி உள்ளார். சொந்த ஊர் இடைக்காட்டூர் என்றாலும், தொகுதிக்கும், கட்சியினருக்கும் அறிமுகம் இல்லாதவர்.
குணசேகரன் எம்எல்ஏ மீதான அதிருப்தி, திருப்புவனம் தாலுகாவில் பேருந்து நிலையம் அமைத்து தருவேன் என்ற இவரது வாக்குறுதி ஆகியவை இவருக்கு சாதகமாக உள்ளன. மாவட்டச் செயலரின் பரிந்துரையின்றி, கனிமொழி எம்பியின் நெருக்கத்தால் வேட்பாளரானதும், வாய்ப்பு கிடைக்காத கட்சியினரின் உள்ளடி வேலைகளும் இவருக்கு பாதகமாகவே உள்ளன.
மக்கள் நலக்கூட்டணி சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தீபா போட்டியிடுகிறார். வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பின்னர் கல்லல் ஒன்றியத்தைச் சேர்ந்த இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இரு கட்சிகளின் மீதான ஊழல் புகார் குறித்து இவரது பிரச்சாரம், கூட்டணிக் கட்சியினரின் பிரச்சாரம் இவருக்கு சாதகமாக உள்ளன. பண பலமின்றி தேர்தலைச் சந்திப்பது இக்கட்சியினருக்கு பாதகமாக உள்ளது.
இளையான்குடி தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு உள்ளது. திருப்புவனம் தாலுகா ஓட்டுக்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும். இங்குள்ள அதிமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள் வேலையில் சுணக்கம் காட்டுகின்றனர். இதனால் அதிமுக, திமுகவுக்கு இடையேயான நேரடிப் போட்டியில் மக்கள் நலக் கூட்டணியும் பங்கு போடுகிறது.