Published : 10 May 2016 03:46 PM
Last Updated : 10 May 2016 03:46 PM

ஜெ-வை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்

நெய்வேலி தொகுதி பாமக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு நெய்வேலியில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது.

இதில், பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது: எனக்கு ஒருமுறை வாய்ப்பளித்தால், 5 ஆண்டுகளில் உங்களை மாற்றிக் காட்டுகிறேன். கருவில் இருக்கும் குழந்தை முதல், 100 வயது கிழவன் வரை அனைவருக்கும் நன்மை பயக்கும் திட்டம் என்னிடம் உள்ளது. நான் முதல்வரானால் சாதாரண மக்களும் எளிதில் அணுகும்படி நடந்து கொள்வேன்.

கடலூர் மாவட்டத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது மக்களை சந்திக்காத ஜெயலலிதா, தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுப்பிச்சை கேட்க ஏன் வந்தார். மாவட்ட மக்கள் அவரை புறக்கணிக்க வேண்டும்.

நான் வகுத்த தேசிய சுகாதார திட்டத்தால், 50 சதவிகித தாய்-சேய் இறப்பு குறைந்துள்ளது. எனது திட்டங்களைத்தான் இன்று மத்திய சுகாதாரத்துறை பின்பற்றி வருகிறது.

கடலூர் மாவட்டம் விவசாய பூமி, இங்கு பெருமாள் ஏரி, வெலிங்டன் ஏரி, வீராணம் ஏரி என மூன்று ஏரிகள் உள்ளது. இவை வெள்ளைக்காரன் காலத்தில் தூர்வாரப்பட்டது. என்எல்சி சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு அந்நிறுவனத்தால் எவ்வித நன்மையும் இல்லை. நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x