

புதுச்சேரி: ஏனாமில் வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற ஆளுநர் தமிழிசையை வரவேற்பதில் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பெய்த கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கோதாவரி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் உள்ளது. கோதாவரி ஆற்று வெள்ளப்பெருக்கால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏனாம் பிராந்தியத்தில் தாழ்வான பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. கோதாவரி ஆற்றில் நாள்தோறும் வெளியேற்றப்படும் நீரின் அளவு உயர்ந்து கொண்டே வந்தது. அதிகபட்சமாக 25 லட்சம் குயூபிக் நீர் வெளியேறியது.
இதனால் ஏனாமில் 14 மீனவ கிராமங்கள் மூழ்கியது. மேலும் நகர பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட. சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு பாதிக்கப்பட்டோருக்கு உணவு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதை பார்வையிட துணைநிலை ஆளுநர் தமிழிசை ஏனாம் இன்று சென்றர். அவரை வரவேற்பதில் இரு கோஷ்டிகளிடையே மோதல் ஏற்பட்டது. காங்கிரஸில் பதவி வகித்து இறுதியில் அங்கிருந்து விலகி என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் ஒரு கோஷ்டியும், தற்போதைய எம்எல்ஏவும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள கொல்லப்பள்ளி அசோக் தலைமையில் ஒரு கோஷ்டியும் ஆளுநரை வரவேற்க காத்திருந்தனர்.
ஆளுநர் வந்தபோது அவரை வரவேற்க, யார் முதலில் செல்வது என்பதில் இரு கோஷ்டிகள் இடையே மோதல் ஏற்பட்டது. அரை மணி நேரமாக இந்த மோதல் நீடித்த நிலையில், போலீஸ் அணிவகுப்புக்கு வந்த போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதையடுத்து ஆளுநருக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், மண்டல நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அங்கு, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், குடிமைப்பொருள் வழங்கல் அமைச்சர் சாய்சரவணக்குமார், எம்எல்ஏ கொல்லபள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக், ஆட்சியர் வல்லவன், மண்டல நிர்வாக அதிகாரி அமன் ஷர்மா, ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌத்ரி மற்றும் ஏனாம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் போது வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் காணொலி காட்சி மூலமாக மண்டல நிர்வாக அதிகாரி விளக்கிக் கூறினார். தொடர்ந்து ஆளுநர் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும், நிவாரண பணிகளை அதிகாரிகள் விரைந்து செய்யும்படி உத்தரவிட்டார்.