Published : 19 Jul 2022 02:29 PM
Last Updated : 19 Jul 2022 02:29 PM

‘நீட் விலக்கு குறித்து தமிழக அரசுக்கு மத்திய அரசின் கருத்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது’ - மக்களவையில் தகவல்

சென்னை: நீட் விலக்கு குறித்த மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் இதை குடியரசுத் தலைவிரின் ஒப்புதலைப் பெற அனுப்பி வைத்து உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதா தொடர்பாக மத்திய சுகாதாரத் துறையின் கருத்துகள், தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், நீட் விலக்கு மசோதா தொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா பதில் அளித்துள்ளார்.

அந்த பதிலில் "நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநர் கடந்த 2.05.2022-ல் அனுப்பி வைத்தார். இதனைத் தொடர்ந்து வழக்கமான நடைமுறைப்படி மத்திய சுகாதாரம் மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் கருத்துகளை பெற அனுப்பி வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மத்திய ஆயுஷ் அமைச்சகங்களின் கருத்துகள் ஜூன் 21 மற்றும் 26-ம் தேதி தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு அளிக்கும் பதிலை பொறுத்துதான் இறுதி முடிவு எடுக்கப்படும். இறுதி முடிவு எடுக்க எவ்வளவு கால அவகாசம் தேவைப்படும் என்பதை கூற முடியாது" என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x