

கடலூர்: உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் பெற்றோர் இல்லாமல் கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, மாணவியின் பெற்றோர் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடக் கோரியும், வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சதீஷ்குமார், 3 அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஓய்வுபெற்ற தடயவியல் துறை அதிகாரி ஒருவர் உட்பட 4 பேர் கொண்ட குழுவை நியமித்து, மாணவியின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டார்.
இந்த மருத்துவக் குழுவில், தங்கள் தரப்பு மருத்துவரை உடனிருக்க அனுமதிக்க கோரி உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மற்றும் மறுபிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட தனி நீதிபதியிடம் மாணவியின் தந்தை தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.
இதைத்தொடர்ந்து, மாணவியின் தந்தை தரப்பில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றமும் இன்று நடைபெறவுள்ள மறு பிரேத பரிசோதனையை நிறுத்திவைக்க மறுத்துவிட்டது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள மாணவியின் வீட்டில், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் சார்பில், ஒரு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
அதில், " சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இறந்துபோன தங்களின் மகள் உடல் மீது மறு பிரேத பரிசோதனை 19.07.2022 அன்று மதியம் 1 மணியளவில் செய்யப்பட உள்ளது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அந்த சமயம் தாங்கள் பிரேத பரிசோதனை செய்யும் இடத்தில் இருக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டபோது, வீட்டில் யாரும் இல்லை. மாணவியின் தாத்தா பெரியசாமி என்பவரிடம் இந்த நோட்டீஸின் பிரதி கொடுக்கப்பட்டது. அதனை அவர் பெற்றுக்கொண்டார்.
பெற்றோர் இல்லாமல் மறு பிரேத பரிசோதனை செய்ய அனுமதி: மாணவி உடல் மறு பிரேத பரிசோதனை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தடை விதிக்க மறுத்த நிலையில் தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன் முறையீடு செய்யப்பட்டது.
தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா காவல்துறை தரப்பில் ஆஜராகி, மாணவியின் பெற்றோர் எங்கு உள்ளனர் என தெரியவில்லை. உடற்கூறாய்வு நிபுணர்கள் வந்துவிட்டனர். பெற்றோர் தரப்பு இல்லாமல் மறுபிரேத பரிசோதனை செய்யலாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
அரசுத் தரப்பில், மாணவியின் வீட்டில் நோட்டிஸ் ஒட்டிவிட்டு மறுபிரேத பரிசோதனை செய்ய தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி, உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு எதுவும் விதிக்காததால் பெற்றோர் இல்லாமல் மறு பிரேத பரிசோதனை நடைமுறையை தொடங்கலாம் என வாய்மொழியாக அறிவுறுத்தினார். மேலும், பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.