கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரைத் தேடும் பணி தீவிரம்
தஞ்சாவூர்: கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட மூவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
திருவிடைமருதூர் வட்டம் பந்தநல்லூர் அடுத்த மதகு சாலையை சேர்ந்தவர்கள் கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (24), சேகர் மகன் மஜ்னு என்கின்ற மனோஜ் (23) கார்மேகன் மகன் அப்பு என்கின்ற ராஜேஷ்(22) வெங்கட்ராமன் மகன் கொளஞ்சி நாதன்(34), ஆகிய நான்கு பேரும் நேற்று இரவு 11 மணி அளவில் மதகு சாலை கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர்.
நால்வரும், கொள்ளிடம் ஆற்றின் நடுவில் நின்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது நள்ளிரவு ஒரு மணி அளவில் தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இதனை எதிர்பார்க்காத நான்கு பேரும் அங்கு உள்ள மணல் திட்டில் ஏறி நின்று கூச்சலிட்டனர். அப்போது கரையில் இருந்தவர்கள் இதுகுறித்து திருவிடைமருதூர் தீயணைப்பு நிலையத்திற்கும், பந்தநல்லூர் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தண்ணீர் வரத்து அதிகமானதால் கொளஞ்சிநாதனை மட்டும் மீட்டனர். ஆகாஷ், மஜ்னு (எ) மனோஜ், அப்பு (எ) ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.
அவர்களை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.
மூன்று பேர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
