

நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில், ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த இரு நாட்களாக மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. உதகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதலே தொடர் மழை பெய்தது. இதனால், கடும் குளிர் நிலவுகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆபத்தான மரங்கள் அகற்றம்
மாநில பேரிடர் மீட்புப் படையினர் 80 பேர், நீலகிரி மாவட்டத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கூடலூர் வட்டாட்சியர் சித்தராஜ் தலைமையிலான குழுவினர், கூடலூர் - உதகை நெடுஞ்சாலையில் சென்று எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆபத்தான மரங்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் மாநில பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இதேபோல, கூடலூர் - ஓவேலி சாலையிலும் ஆபத்தான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, "கூடலூர் பகுதியில் மழை குறைந்துவிட்ட சூழலில், முன்னெச்சரிக்கையாக சாலையோரம் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். கனமழை பெய்தாலும் பேரிடர் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன" என்றனர்.
தடுப்புச் சுவர்
இந்நிலையில், சேரம்பாடி பள்ளிகுன்னுவில் மண் சரிவு ஏற்பட்டது. விநாயகர் கோயில் அருகே மண் சரிவால் உணவகம் சேதமடைந்தது. தொடர் மழை காரணமாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், மேடான பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மீண்டும் மண் சரிவு ஏற்பட்டால், கீழ் பகுதியிலுள்ள கடைகள் இடியும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் அந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை அளவு (மி.மீ.)
நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக நடுவட்டத்தில் 80 மில்லி மீட்டர் மழை பதிவானது. ஓவேலி - 52, பந்தலூர் - 50, தேவாலா - 48, சேரங்கோடு - 37, கூடலூர் - 34, செருமுள்ளி - 33, கிளன்மார்கன் - 28, அப்பர் பவானி - 12, உதகை - 7 மி.மீ. மழை பதிவானது.