

தமிழகத்தின் உள் மாவட்டங் களிலும், கடலோர மாவட்டங் களிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் ஊட்டியில் 20 மில்லி மீட்டரும், சேலம், மதுரை மாவட்டத்தில் சிட்டம்பட்டி, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், வேலூர் மாவட்டம் ஆலங்காயம் ஆகிய இடங்களில் தலா 10 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.
நேற்று பகல் நிலவரப்படி திருத்தணியில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. மாலை 5.30 மணி நிலவரப்படி, தமிழகம் முழுவதும் 40 டிகிரி செல்சியஸுக்கு குறைவாகவே வெப்பம் பதிவானது. அக்னி நட்சத்திர காலத்தில் இயல்பைவிட நேற்று வெப்பம் குறைந்து காணப்பட்டது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
“அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.