Last Updated : 19 Jul, 2022 06:02 AM

 

Published : 19 Jul 2022 06:02 AM
Last Updated : 19 Jul 2022 06:02 AM

சின்னசேலம் பள்ளி வன்முறை திட்டமிட்டு நடந்ததா?

பெரும் கலவரத்தில் சூறையாடப்பட்ட சின்னசேலம் தனியார் பள்ளியைச் சுற்றிலும் நேற்று இரண்டாம் நாளாக குவிக்கப்பட்டிருந்த போலீஸார்.

கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதியின் சந்தேக மரணத்தை தொடர்ந்து, சின்னசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் திட்டமிட்டு நடைபெற்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இதற்கு போலீஸார் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.

சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், கடலூர் மாவட்டம் பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கத்தின் மகள் மதி பிளஸ் 2 படித்து வந்தார். பள்ளிதிறந்த 10 நாட்களில் மாணவியை வேறு பள்ளிக்கு மாற்ற பெற்றோர் முடிவுசெய்து, அவரது மாற்றுச் சான்றிதழை கோரியுள்ளனர்.

இந்நிலையில் மாணவி பள்ளிக் கட்டிடத்தின் 3-வது மாடியிலிருந்து கீழே விழுந்து, பலத்த காயமடைந்ததாக, பள்ளி நிர்வாகம் சார்பில் கடந்த 13-ம் தேதி அதிகாலை பெற்றோருக்கு தகவல் அளிக்கப்படுகிறது. அவர்கள் பள்ளிக்கு வந்து சேருவதற்குள், பள்ளி நிர்வாகம் சார்பில் மீண்டும், பெற்றோரை தொடர்புகொண்டு, ‘உங்கள் மகள் உயிரிழந்து விட்டார். நேராக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வரவும்’ என்ற தகவல் தரப்படுகிறது.

இதையடுத்து பெற்றோர் தங்கள் உறவினர்களுடன் மருத்துவமனைக்குச் சென்று, மாணவியின் உடலை பார்வையிட்டுள்ளனர். ‘எங்கள் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, அவரை கொலை செய்துள்ளனர்’ என்று கூறி அன்று பிற்பகலே கள்ளக்குறிச்சியில் மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.

சின்னேசலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற தாக்குதலின் போது பள்ளியில் இருந்து
மேஜை, நாற்காலிகைள தூக்கிச் செல்லும் பொதுமக்கள்.

மறுநாள் போராட்டம் வலுத்து, கடலூர் மாவட்டம் வேப்பூரில் சாலை மறியலும், அதைத்தொடர்ந்து மீண்டும் கள்ளக்குறிச்சியிலும் தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 16-ம் தேதி பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகிறது. அதை ஏற்க மறுத்த மாணவியின் பெற்றோர், அது போலியான அறிக்கை எனக் கூறி, மீண்டும் கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மறுநாள் 17-ம் தேதி காலை 10 மணி அளவில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் பள்ளியை முற்றுகையிட வந்தபோது, போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். பரஸ்பரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு,அது பெரும் வன்முறையாக வெடித்து, வன்முறைக் கும்பல் பள்ளியை சூறையாடியது.

இந்த வன்முறை, நன்கு திட்டமிட்ட தாக்குதல் என பல்வேறு தரப்பினரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். வன்முறையில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளிக்கு வெளியே, கள்ளக்குறிச்சி - சின்னசேலம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில், போலீஸாருடன், போராட்டக்குழு தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், பள்ளியின் பின்புறமாக உள்ளே நுழைந்த மற்றொருகும்பல் மண்ணெண்ணெய், டீசல் உள்ளிட்டவற்றைக் கொண்டு வாகனங்களுக்குத் தீ வைத்ததுடன், பொருட்களையும் சூறையாடியது. பள்ளி வளாகத்துக்குள் தீ வேகமாக பரவிய நிலையில், தீயை அணைக்க வந்த தீயணைப்பு வாகனத்தையும் உள்ளே செல்லவிடாமல், திருப்பி அனுப்பியுள்ளனர்.

இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சிலரும் இப்போராட்டத்தில் பங்கேற்றிருக்க கூடும் என்று இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அவர்களிடமிருந்து பள்ளி நிர்வாகம் கட்டணம் என்ற பெயரில் பல லட்சங்களை வசூலித்திருப்பதாகக் கூறப்படும் புகாரில், அவர்களும் இப்போராட்டத்தை பயன்படுத்தி, வன்முறையில் ஈடுபட்டிருக்க வாய்ப்புண்டு என்று தெரிவிக்கின்றனர்.

4 நாட்களாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், 16-ம் தேதி மாலை கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பிலிருந்து போராட்டக்காரர்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தபோது, இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றதை அறிந்தும், அதன் பின்னணி குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாற்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.

வன்முறைக்குள்ளான பள்ளியில் பிரதானக் வகுப்பறைக் கட்டிடத்தின் முகப்பிலும், 2 மற்றும் 3-வது மாடியிலும், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவிகள் தங்கியிருக்கும் விடுதியில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. இதுவும் மாணவியின் உயிரிழப்பில் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றன.

பள்ளி நிர்வாகமோ சிசிடிவி கேமராவை மாணவிகள் விடுதியில் முகப்பு பகுதியில் மட்டும் வைத்திருப்பதாக தெரிவித்ததோடு, அதன் பதிவுக் காட்சிகளும் காவல்துறையினர் வசம் உள்ளது என்கின்றனர். விடுதியின் நாலாபுறமும் கேமரா பொருத்தியிருக்கும் பட்சத்தில் மாணவியின் உயிரிழப்புக்கான தடயங்கள் கிடைக்க வாய்ப்புண்டு என்கின்றனர் இதர மாணவர்களின் பெற்றோர்.

16-ம் தேதி மாலை திரண்ட கூட்டத்தின் வீரியத்தை போலீஸார் அடையாளம் கண்டு இதுகுறித்து காவல் தலைமைக்கு தகவல் தெரிவித்து, கூடுதல் காவல்துறையினரை வரவழைத்திருந்தால் வன்முறையை தடுத்திருக்கலாம். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இதில் போதிய கவனம் செலுத்தாதது மிகவும் வருத்தமானது என்கின்றனர் போலீஸார்.

திமுக ஆதரவு எம்எல்ஏ ஆவேசம்

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ, மாணவி உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, “மற்ற இடங்களில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் தமிழக அரசு, மாணவி ஸ்ரீமதி விவகாரத்தில் மவுனமாக இருப்பதோடு, இதுவரை நிவாரணம் அறிவிக்காதது ஏன்? கூட்டணியில் இருப்பதால் எதையும் கேட்க மாட்டேன் என எண்ண வேண்டாம்” என அரசை கடுமையாகச் சாடினார்.

ஆளும்கட்சி கூட்டணியில் உள்ள வேல்முருகன் அரசுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பது ஆளும் கட்சி உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x