Published : 19 Jul 2022 06:07 AM
Last Updated : 19 Jul 2022 06:07 AM

சின்னசேலம் பள்ளி வன்முறை சம்பவத்தில் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தனியார் பள்ளியில் நடந்த தாக்குதலில் சேதமடைந்த வாகனத்தை நேற்று ஆய்வு செய்த அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கணேசன். உடன் மாவட்ட ஆட்சியர் தர் உள்ளிட்டோர்.

கள்ளக்குறிச்சி: மாணவி உயிரிழப்பைத் தொடர்ந்து, சின்னசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் முன்னாள், இன்னாள் மாணவர்கள் என்ற போர்வையில், திருச்சி, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் அந்தப் பள்ளியில் ஆய்வு செய்தனர்.

பின்னர், இக்கலவரத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் காவலர்களையும் அமைச்சர்கள் சந்தித்து,ஆறுதல் கூறினார். தொடர்ந்துசெய்தியாளர்களைச் சந்தித்தஅமைச்சர் எ.வ.வேலு, “சுமார்3,200 மாணவ, மாணவியர் பயிலும்இப்பள்ளியில் விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்றுள்ளன.

பள்ளியில் படித்த மாணவி உயிரிழந்த நிலையில், மாணவியின் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் இருப்பதால் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாணவியின் இல்லத்துக்கு சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர்கள் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளோம் என்ற கூறியுள்ளனர். உடனடியாக நீதிமன்ற உத்தரவுக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கணேசன் கூறிவிட்டு வந்த நிலையில், மறுநாள் இந்த மாதிரி நடந்துள்ளது வருத்தமளிக்கிறது.

விஷமிகள் சிலர் சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி, தவறான தகவல்களை பரப்பி அதன்மூலம் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பலர் இங்கு வந்து பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டம் என்ற பெயரில் முன்னாள் மற்றும் இன்னாள் மாணவர்கள் என்ற போர்வையில் களமிறங்கி, வன்முறையில் ஈடுபட்டு பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர்.

67 வாகனங்கள் தீக்கிரையாயின

இதில் 37 பேருந்து உட்பட 67 வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் 48 மோட்டார் சைக்கிள்கள், ஒரு பேருந்து, ஒரு ஜீப் எரிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் இருந்த மாற்றுச் சான்றிதழ், மாணவர்களின் சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவை எரிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தை கட்டுப்படுத்த வந்தகாவலர்களில் 108 பேர் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுள்ளனர். இதில் 40 பேர் இன்னும் உள் நோயாளிகளாக சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த பிரச்சினைக்கு நடுவிலும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எவ்வித அசவுகரியமும் ஏற்படாத வகையில் திறமையாக செயல்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 278 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை தொடரும்".

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு

“இப்பள்ளியில் பயின்றுவரும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். மேலும் தனியார் பள்ளி கூட்டமைப்பினரும் உதவ முன்வந்துள்ளதால் முதற்கட்டமாக 10, பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் நடைபெறுவதற்கு ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x