Published : 19 Jul 2022 06:13 AM
Last Updated : 19 Jul 2022 06:13 AM

சின்னசேலம் பள்ளி வன்முறையில் மக்கள் அதிகாரம், பெரியார் தி.க. உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த 278 பேர் கைது: 20 சிறுவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் சேர்ப்பு

பள்ளியை சேதப்படுத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். | படங்கள்: எம்.சாம்ராஜ் |

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிகலவரம் தொடர்பாக மக்கள்அதிகாரம், பெரியார் தி.க. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 20 பேர் சிறுவர்கள்.

கலவரம் தொடர்பாக வாட்ஸ்அப்பில் பதிவிட்டதாக கரூர் மாவட்டம் பசுபதிபாளையத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநிலப் பொருளாளர் சுரேந்தர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர நிர்வாகி சிவக்குமார் மற்றும் தமிழரசன், சங்கர் ஆகிய 4 பேரை கரூர் பசுபதிபாளையம் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்கள் 4 பேரையும் கரூர்குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் நேற்று போலீஸார் ஆஜர்படுத்தினர்.

பின்னர், 4 பேரையும் போராட்டத்துக்குத் தூண்ட மாட்டோம் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, தினமும் மாலையில் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினார்.

இதேபோன்று கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், தந்தை பெரியார் திராவிடர்கழக செயலாளர் பிரபு ஆகியோரும் இக்கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் 9-வது வார்டுஅதிமுக இளைஞர், இளம்பெண்கள் பாசறைச் செயலாளரான துரைமங்கலம் பகுதியைச் சேர்ந்த தீபக்(26), அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி 8-வது வார்டு செயலாளரான துறைமங்கலம் புதுக் காலனிபகுதியைச் சேர்ந்த சூரியா(21), அதிமுக பிரமுகரான பெரம்பலூர்கம்பன் தெருவைச் சேர்ந்த சுபாஷ்(21).

ஆகிய மூவரும், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஜூலை 18-ல்(நேற்று) கண்டன பேரணி நடத்தவிருப்பதாக, சமூக வலைதளங்களில் தகவல்களை பரப்பியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபட்டதால், தீபக், சூரியா, சுபாஷ் ஆகிய 3 பேரையும் பெரம்பலூர் போலீஸார் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

14 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவர சம்பவத்தை தொடர்ந்து நேற்று சம்பந்தப்பட்ட பள்ளியைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இப்போராட்டம் மாவட்டத்தின் மற்றப் பகுதிகளுக்கும், பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவாமல் இருக்க, போலீஸார் நேற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் முக்கிய கல்வி நிலையங்களின் முன்பு நேற்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, சமூக வலைதளங்கள், தொலைக்காட்சி பதிவுகளின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்ட போலீஸார் 278 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல் மற்றும் பொதுச் சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 14 பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்து, அவர்களை கைது செய்தனர்.

இவர்களில் 128 பேர் கள்ளக்குறிச்சி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முகமது அலி முன்பு நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதில் 20 பேர் சிறுவர்கள். அதனால் அவர்கள் கடலூர் கூர்நோக்கு சிறார் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களை, வரும் ஆக.1 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x