அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக என்சிசி மாணவர்கள் பதக்கப் பட்டியலில் 2-ம் இடம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில், தமிழக என்சிசி மாணவர்கள் பதக்கப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்தனர்.

இந்திய தேசிய துப்பாக்கி சங்கம் சார்பில், தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையேயான, அகில இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டி, பஞ்சாப் மாநில தலைநகர் சண்டிகரில் நடைபெற்றது.

கடந்த 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடந்த இப்போட்டியில், தேசிய மாணவர் படையின் 17 இயக்குநரகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் அடங்கிய தேசிய மாணவர் படை இயக்குநரகம் சார்பில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 17 தேசிய மாணவர் படை மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றனர்.

இதில், 12 மாணவர்கள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில், தமிழக மாணவர்கள் 4 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தை வென்று, ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் 2-வது இடத்தைப் பிடித்தனர்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தமிழக விளையாட்டுத் துறை செயலர் அபூர்வா பாராட்டு தெரிவித்தார். தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் அடங்கிய தேசிய மாணவர் படை இயக்குநரகத்தின் துணை தலைமை இயக்குநர் அதுல்குமார் ரஸ்தோகி உடன் இருந்தார்.

இத்தகவல், பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in