Published : 19 Jul 2022 06:34 AM
Last Updated : 19 Jul 2022 06:34 AM
சென்னை: வில்லிவாக்கம் ஏரியை சீரமைக்கக் கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 2017-ம் ஆண்டு பசுமை தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது.
மொத்தம் 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி சென்னை குடிநீர் வாரியகட்டுப்பாட்டில் இருந்து. இந்த வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தொடர் உத்தரவால் அங்கு மெட்ரோ ரயில் திட்ட மண் கொட்டுவது தடுக்கப்பட்டது. முதல்கட்டமாக 27.5 ஏக்கர் பரப்பு ஏரி சென்னை மாநகராட்சி வசம் வழங்கப்பட்டு, 11.5 ஏக்கர் பகுதியை சென்னை குடிநீர் வாரியம் வைத்துக்கொண்டது.
அங்கு நவீனகழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தது. தற்போது மாநகராட்சி சார்பில்ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வில்லிவாக்கம் ஏரி சீரமைக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
வில்லிவாக்கம் ஏரி பகுதியில் சென்னை குடிநீர் வாரியம் நவீன சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் 3 ஏக்கர் நிலம் போக, மீதம் உள்ள 8.5 ஏக்கர் பரப்பை சென்னை மாநகராட்சியிடம் வழங்க வேண்டும். மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே சீரமைக்கப்பட்டு வரும் ஏரியுடன் இப்பகுதியை இணைத்து ஏரியின் பரப்பை அதிகரிக்கலாம். இணைக்க இருக்கும் பகுதியை மேலும் ஆழமாக்கி புதிய நீர்த்தேக்கமாகவும் மாற்றலாம்.
ஒப்படைக்கும் பணிகளை குடிநீர் வாரியம் 3 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். நவீன சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுத்திகரித்து நீர்நிலையில் விடும் நீரின் தரம் குடிக்க உகந்ததாக, குறைந்தபட்சம் குளிக்க உகந்ததாக இருக்க வேண்டும்.
மாநகராட்சி மேற்கொண்டு வரும் பொழுதுபோக்கு பூங்காவால் ஏரியில் தற்போது உள்ள நீர் கொள்திறன் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட ஆட்சியருடன் இணைந்து கூட்டாக ஏரியில் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவர்களை மறுகுடியமர்வு செய்ய வேண்டும். ஏரியின் எந்த பகுதியிலும் கழிவுகளை கொட்ட அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT