Published : 19 Jul 2022 07:47 AM
Last Updated : 19 Jul 2022 07:47 AM

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேற்று திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் வாகனங்களில் விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை ஒட்டி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மாமல்லை/காஞ்சி/திருவள்ளூர்: மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதற்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் இப்போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்திய வரலாற்றில் முதல் முறையாக 188 நாடுகள் பங்கேற்கும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது.

போட்டி நடைபெறவுள்ள இடத்தில் நடைபெற்று வரும் ஆயத்தப் பணிகள் குறித்து விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள ஒலிம்பியாட் போட்டிக்கான ஆயத்தப் பணிகள் 90 சதவீதம் அளவுக்கு நிறைவு பெற்றுள்ளன.

போட்டி நடைபெறுவதற்கு இரண்டு அரங்கங்கள் தயார் செய்யப்பட்டுள்ளனன. ஒரே நாளில் 700 விளையாட்டு வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகி்ன்றன.

இம்மாதம் 28-ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தொடக்க விழா நடைபெற்றும். இந்த போட்டியானது ஆக. 10-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த ஆண், பெண் என 343 அணிகளைச் சேர்ந்த சுமார் 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த போட்டி சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது. 4,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.

காஞ்சிபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்
ராட்சத பலூனை பறக்க விடுகிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன் .

விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பில் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. இந்த பலூனை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பறக்க விட்டார்.

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் சார்பில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில் செஸ் ஒலிம்பியாட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஓவியங்களை மாணவ, மாணவிகள் வரைந்தனர்.

விழிப்புணர்வு சைக்கிள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவள்ளூர் மாவட்டத்திலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்வில், ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளைகோல் பயிற்றுநர் ஆனஸ்ட்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x