

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே அரண்வாயில் குப்பம் பகுதியில் மாநகர பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியில் மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நடத்திய போராட்டத்தால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது,
மாநகர பேருந்து ஒன்று நேற்று காலை, சென்னை - தியாகராய நகரில் திருவள்ளூர் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தது. அப்பேருந்தில், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர் துரை, செங்கல்பட்டு மாவட்டம்- பொன்விளைந்தகளத்தூரைச் சேர்ந்த நடத்துநர் காத்தவராயன் (50) ஆகியோர் பணியில் இருந்தனர்.
அந்த பேருந்து, பூந்தமல்லி- திருவள்ளூர் நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அருகே அரண்வாயல் குப்பம் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, அங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால்,பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த நபர்களில் சிலர், பேருந்தை வழிமறித்து ஓட்டுநர் துரையை தாக்கி விட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, மாநகர பேருந்து ஓட்டுநர் துரை, பேருந்தை அங்கேயே நிறுத்திவிட்டு, நடத்துநருடன் பேருந்தில் இருந்து, இறங்கினார். அப்போது, அப்பகுதிக்கு, திருவள்ளூர், பூந்தமல்லி பகுதிகளில் இருந்து வந்த 8- க்கும் மேற்பட்ட மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பேருந்தை ஆங்காங்கே நிறுத்திவிட்டு, ஓட்டுநர் துரை மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாநகர பேருந்துகளில் பயணித்த பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்குள்ளானதோடு, பூந்தமல்லி- திருவள்ளூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த செவ்வாப்பேட்டை போலீஸார், சம்பவ இடம் விரைந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார், ஓட்டுநர் துரையை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
ஆகவே, சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு, மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பேருந்துகளை இயக்க தொடங்கினர்.