

அரவக்குறிச்சி, தஞ்சை பேரவைத் தொகுதி தேர்தலை மே 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இரு தொகுதிகளிலும் புதிதாக வேட்புமனுக்கள் பெற்று மறு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் மே 16-ல் நடைபெற்றது. கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் பேரவைத் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுத்ததாக புகார் வந்ததால் இரு தொகுதியிலும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அவ்விரு தொகுதிகளிலும் மே 23-ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் பேரவைத் தேர்தலை மே 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் நெல்லை வி.கே.புரத்தைச் சேர்ந்த யோவான் தங்கராஜ் சார்பில் வழக்கறிஞர் டி.செல்வநாயகம் நேற்று பொதுநல மனு தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு அதிமுக, திமுக சார்பில் பணம் வழங்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி தொகுதியில் அமைச்சர்களுக்கு நெருக்கமான அன்புநாதன் வீட்டில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் கே.சி.பழனிச்சாமி வீட்டிலும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தொகுதியில் விடுதி ஒன்றில் வாக்காளர்களுக்கு வழங்க பதுக்கி வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரு தொகுதிகளில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் மீது போலீஸார் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தலை ஒத்திவைக்கும்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய முறைகேட்டில் தொடர்புடைய இரு கட்சிகளின் வேட்பாளர்களும் போட்டியில் தொடர்வர். இவர்களை தேர்தலில் போட்டியி¬ அனுமதிப்பது சட்டவிரோதமானது.
இதனால் தேர்தலை ஒத்திவைக்காமல் இரு தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும். மறு தேர்தல் நடத்தும் போது புதிதாக வேட்புமனு பெறப்படும். அப்போது முறைகேட்டில் ஈடுபட்ட தற்போதைய வேட்பாளர்கள் தேர்தல் ஆணைய விதிப்படி மீண்டும் வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியாது. புதிய நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இதனால் இரு தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும்.
எனவே அரவக்குறிச்சி, தஞ்சாவூர் பேரவைத் தொகுதிகளின் தேர்தலை மே 23-ம் தேதிக்கு ஒத்திவைத்து தேர்தல் ஆணையம் முறையே மே 14, 15 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இரு தொகுதிகளிலும் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.