திருப்பத்தூர் | மலைவாழ் மக்களை ஊரை விட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு

திருப்பத்தூர் | மலைவாழ் மக்களை ஊரை விட்டு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு
Updated on
1 min read

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நாயக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட பனங்காட்டேரி மற்றும் காமனூர்தட்டு ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவி பட்டியலினத்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது. நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இந்துமதி என்ற பட்டியலின பெண் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில் இந்துமதி நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், அவர் பதவி ஏற்க முடியவில்லை. இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தற்செயல் தேர்தல் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. நாயக்கனேரி ஊராட்சி ஒன்றிய குழு வார்டு எண் 24 உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக சார்பில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில், அதிமுக ஒற்றை தலைமை பிரச்சினையால் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்படவில்லை. அதனால், அவர் அதிமுக ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நாயக்கனேரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இந்துமதிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி நாயக்கனேரி மற்றும் காமனூர் பகுதியில் வசிக்கும் 20-க்கும் மேற்பட்டோரை நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகத்தை சேர்ந்த முன்னாள் தலைவர் சிவக்குமார் என்பவர் ஒதுக்கி வைத்துள்ளதாக நேற்று குற்றச்சாட்டு எழுந்தது.

ஊர் பஞ்சாயத்து குறிப்பிட்ட சிலரை ஒதுக்கி வைத்து, அவர்களிடம் கட்டுப்பாடுகளை விதித்ததாக கூறப்படுகிறது.

இதனால், பாதிக்கப்பட்ட நாயக்கனேரி பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் நாயக்கனேரி பஞ்சாயத்து நிர்வாகியான சிவக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பால் கேனுடன் வந்து ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.

அதன்பேரில், காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து நாயக்கனேரி ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in