கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகத்தினரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி | கோப்புப் படம்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி | கோப்புப் படம்.
Updated on
1 min read

சென்னை: “கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் பள்ளி நிர்வாகத்தினர் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்தும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும்” என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளியில் படித்த கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி இறந்தது பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் மிகப்பெரிய கலவரத்திற்கு வித்திட்டுள்ளது.

கடந்த 13ஆம் தேதி இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த தகவல் கூட மிகவும் காலதாமதமாக கூறப்பட்டுள்ளது. ஆனால், மாணவியின் உடலைப் பார்த்தவர்கள் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்ததற்கான எந்தவிதமான காயங்களோ, எலும்பு முறிவுகளோ இல்லை என்று உறுதியாக கூறுகிறார்கள்.

இந்தப் பின்னணியில், பல்வேறு சந்தேகங்களின் அடிப்படையில் மாணவியின் மரணம் குறித்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மாணவ அமைப்புகள் சமூக ஊடகங்களின் மூலம் தகவல் பரப்பப்பட்டு, நேற்று மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே திரண்டு பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு காரணம் பொதுமக்களுடன் சேர்ந்து சமூக விரோதிகளும் புகுந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை காவல்துறையினர் முன்கூட்டியே அறிந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத காரணத்தால் சமூக விரோதிகள் பள்ளிக்குள் புகுந்து 17 பேருந்துகள் மற்றும் வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இத்தகைய போராட்டத்திற்கு காரணம் பள்ளி நிர்வாகத்தின் மீது எழுந்திருக்கிற பலத்த சந்தேகம் என்று கூறப்படுகிறது.

பள்ளி நிர்வாகத்தின் தவறான அணுகுமுறையின் காரணமாகத் தான் மாணவி மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. மாணவியினுடைய மரணம் தற்கொலை அல்ல, இயற்கையான மரணமும் அல்ல என்று உறுதியாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிபிசிஐடி விசாரணக்கு உத்தரவிடப்பட்டிருப்பதால், மாணவியின் மரணத்திற்கு உண்மையான காரணத்தை முற்றிலும் அறிய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்த மரணத்தில் பள்ளி நிர்வாகத்தினர் ஏதோவொரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்தும் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

எனவே, மாணவி மரணம் என்பது தற்கொலை அல்ல என்கிற காரணத்தினால், இதில் சம்மந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரையும் உரிய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உண்மையை வெளியே கொண்டு வந்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும். இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்'' என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in