Published : 18 Jul 2022 04:25 AM
Last Updated : 18 Jul 2022 04:25 AM

காவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: பவானி கூடுதுறையில் பக்தர்களுக்கு தடை

காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆடி மாதப்பிறப்பையொட்டி பவானி கூடுதுறையில் வழிபாடு செய்ய பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயிலுக்கும், பவானி, காவிரி மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதியும் ஒன்று கூடும் கூடுதுறைக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பரிகார பூஜைகளுக்கு புகழ்பெற்ற இக்கோயிலில் ஆடி மாதப் பிறப்பின்போதும், ஆடி 18 பண்டிகையின்போதும், புதுமணத் தம்பதிகள் கூடுதுறையில் நீராடி, தாலிக்கொடி மாற்றி சுவாமியை வழிபடுவர்.

நேற்று மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆடி மாதப்பிறப்பான நேற்று புது மணத்தம்பதிகள் மற்றும் பக்தர்கள் கூடுதுறையில் நீராடவும், பரிகார பூஜை மேற்கொள்ளவும் ஏராளமானவர்கள் வந்த நிலையில், நீர்வரத்து காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், கூடுதுறை காவிரி மற்றும் பவானி ஆற்றின் கரைகளில் தடுப்புகள் அமைத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை

இதனிடையே, ஈரோடு மாவட்ட காவிரி கரையோரம் உள்ள அம்மாப்பேட்டை, நெரிஞ்சிப்பேட்டை, பவானி, கருங்கல்பாளையம், கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கொடுமுடி காவிரியிலும் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. கரையோரப் பகுதிகளில் போலீஸாரும், வருவாய்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பவானி புதிய பேருந்து நிலையம் அருகே காவிரி ஆற்றின் கரையோரத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து, அங்கு வசிப்பவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். ஈரோடு மாவட்டத்தில் காவிரி கரையோரப்பகுதியில் உள்ள கோயில்கள், படித்துறைகளை மூழ்கடித்து வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.காவிரி மற்றும் பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயில் பகுதியின் இருபுறமும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x