Published : 09 May 2016 04:41 PM
Last Updated : 09 May 2016 04:41 PM

திருப்பூர் தெற்கு தொகுதியில் வலுக்கும் போட்டி

திருப்பூர் தெற்கு தொகுதி, மறுசீரமைப்புக்கு பின் கடந்த 2011-ம் ஆண்டு உருவானது.

கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட, கே.தங்கவேல் வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக- காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த, காங்கிரஸின் செந்தில்குமாரை விட, 38,303 வாக்குகள் கூடுதலாக பெற்றார்.

திருப்பூர் மாநகராட்சியின் 21 வார்டுகள், தெற்கு தொகுதிக்குள் வருகின்றன. பனியன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அதை சார்ந்த தொழில்களே பிரதானம். கொங்கு வேளாளர், இஸ்லாமியர், ஆதிதிராவிடர்கள், செட்டியார், கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து திருப்பூருக்கு வந்த, ஏராளமானோர், தங்கி வேலை செய்யும் பகுதி. அதில், 60 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு வாக்குரிமையும் உள்ளது.

அதிமுக சார்பில் துணைமேயர் சு.குணசேகரன் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் செல்வராஜூடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை போட்டு, அதிமுகவினரே வேட்பாளரை மாற்றக்கோரி, போஸ்டர் அடித்த சம்பவமும் சமீபத்தில் நிகழ்ந்தது. அதிமுகவின் கோஷ்டி பூசல் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவின் போது எப்படி வேலைபார்க்கப் போகிறார்கள் என்பதிலும் மர்மம் நீடிக்கிறது. திருப்பூர் தெற்கை கைப்பற்றினால் தான், அடுத்து வர உள்ள உள்ளாட்சித் தேர்தலில், மேயராகவும் வெற்றி பெற முடியும் என கணக்குப்போட்டு, தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வேலைபார்ப்பதாகவும் தகவல்.

திமுகவின் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ், தெற்குதொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உட்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் விருப்ப மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், செல்வராஜூக்கு கிடைத்ததைக் கண்டு அனைவருக்கும் ஆச்சர்யம். பல்லடத்தில் ஸ்டாலின் பங்கேற்ற, விடியல் மீட்புப் பேரணி பொதுக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு, கட்சி அளித்த கொடை என்றனர்.

கனிமொழி திருப்பூர் பிரச்சாரத்துக்கு வந்தபோது, ‘நான், எப்படி வேலை பார்ப்பேன்? என, திருப்பூர் மக்களுக்கு சொல்ல வேண்டியதில்லை. மேயராக இருந்தபோதே, அதை நிரூபித்துள்ளேன். இப்போதுதான், சட்டப்பேரவை உறுப்பினராக போட்டியிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது’ என செல்வராஜ் பேசியதை, கனிமொழி ரசிக்கவில்லை. அவர், அதே மேடையில் ‘கருணாநிதி யாருக்கு எப்போது எதை செய்ய வேண்டுமோ, அதை உரியநேரத்தில் செய்வார்’ என பதில் கொடுத்தார். ஆருடத்தை நம்பக்கூடாது என கருணாநிதி சொன்னாலும், தெற்கு திமுகவுக்கு தான் என நம்பிக்கொண்டிருப்பதால், பிரச்சாரத்தில் மந்தம்.

நடப்பு சட்டப்பேரவை உறுப்பினரான கே.தங்கவேல், பொதுமக்களை எளிதில் அணுகும் தன்மை கொண்டவர். தென்னம்பாளையம் பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பாலங்களை கட்டியது, தொகுதி நிதியை முழுமையாக செலவழித்தது என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு, மீண்டும் வாக்குகள் கேட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த கால தேர்தல்களில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் திருப்பூர் தொகுதியை தன் வசப்படுத்தி வைத்திருந்த நிலையில், தற்போது தேமுதிக உட்பட 6 கட்சிகளுடன் கூட்டு, பொதுமக்களிடம் சம்பாதித்துள்ள நற்பெயரும் தங்களை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பழைய பேருந்து நிலையம், பல்லடம், தாராபுரம், காங்கயம் மற்றும் குமரன் சாலைகளில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசல், ஆமை வேகத்தில் நடக்கும் பாலப்பணிகள், குடிநீர் விநியோகம், சுகாதாரம், கொசு ஒழிப்பில் மெத்தனம், டெங்கு பாதிப்பு, பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. போக்குவரத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, மழைக்காலங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகும் அளவுக்கு படுமோசமான நகர கட்டமைப்பு, சிறுகுறு நடுத்தர நிறுவனங்களை பாதிக்கச்செய்யும் விற்பனை வரி பிரச்சினைகளும் இத்தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் தொகுதியினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x