கோவை | உரிய விலை கிடைக்காததால் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்

கோவை | உரிய விலை கிடைக்காததால் தக்காளியை குப்பையில் கொட்டிய விவசாயிகள்
Updated on
1 min read

உரிய விலை கிடைக்காததால், கிணத்துக்கடவு பகுதியில் தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டி சென்றனர்.

தமிழகத்தில் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தக்காளி சாகுபடி முக்கிய விவசாயமாக இருந்து வருகிறது. இங்கு விளையும் காய்கறிகளை கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர். அங்கு காய்கறிகள் ஏலம் விடப்படுகிறது.

இங்கு கொள்முதல் செய்யப்படும் தக்காளிகளை கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் வியாபாரிகள் அனுப்பிவைக்கின்றனர். கடந்த சில மாதங்களாக 15 கிலோ அளவு கொண்ட ஒரு பெட்டி ரூ.1,000 வரை விற்பனையானது. தற்போது கனமழையால் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று ஒரு பெட்டியின் விலை ரூ.50-க்கும் கீழ் சென்றது. மேலும், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு நேற்று வியாபாரிகள் வராததால், தக்காளி பழங்கள் விற்பனையாகாமல் கிடப்பில் கிடந்தன. இதனால், கவலையடைந்த விவசாயிகள், தாங்கள் கொண்டு வந்த தக்காளியை குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "ஓர் ஏக்கர் தக்காளி நடவு செய்வதற்கு ரூ.75 ஆயிரம் வரை செலவாகிறது. உரிய விலை கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தக்காளிக்கு உரிய விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in