

தாது மணல் கொள்ளையை தடுக்காமல் அரசே ஏற்று நடத்தும் என்று அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியது ஏமாற்று வேலை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கனிமவள சுரண்டல்கள் கடந்த 20 ஆண்டு காலத்தில் நடந்துள்ளது. கிரானைட் கொள்ளையால் அரசுக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும் ரூ.1.06 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தாதுமணல் கொள்ளையும், ஆற்றுப்படுகைகளில் நிகழ்த்தப்பட்ட மணல் கொள்ளையும் மேலும் பல லட்சம் கோடிகள் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இயற்கைச் சூழலை சிதைத்து சுற்றுச் சூழல் சமநிலைக்கும் ஆபத்தை விளைவித்துள்ளன.
விற்கப்பட்ட தாதுமணலில் தோரியம் மட்டும் ரூ.60 லட்சம் கோடிகள் இருக்கும் என்று மத்திய அரசின் அணுசக்தித் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சுரண்டல் மிகப்பெருமளவில் நடைபெற்ற காலம் 2002 முதல் 2012 காலகட்டமாகும்.
இந்த முறைகேடு வெளிவந்த பின்னர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாதுமணல் குவாரிகளில் ஒரு மாதம் ஆய்வு நடத்திய ககன்தீப்சிங் பேடி குழு அங்கு தாது மணல் கொள்ளை நடந்திருப்பது உண்மை தான் என்று 17.09.2013 அன்று அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால் அந்த அறிக்கை விவரங்கள் இதுவரை மர்மமாகவே உள்ளன. இந்த அறிக்கையை வெளியிடாமல் மூடி மறைத்த முதல்வர் ஜெயலலிதா தாதுமணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என்று கூறுவது மக்களை ஏமாற்றுவதற்கு தான். திமுக - அதிமுக காட்டும் மாய்மாலங்களுக்கு தமிழக மக்கள் பலியாகமாட்டார்கள்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.